சென்னை: காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை உட்பட தமிழகம் முழுவதிலும் கடற்கரை, பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்து பொழுதுபோக்கு தலங்களிலும் மக்கள் குடும்பத்துடன் திரண்டு பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
போகி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கலை தொடர்ந்து காணும் பொங்கல் நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பலரும் குடும்பத்துடன் கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு தலங்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மக்களின் வசதிக்காக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
மாநகர காவல் துறை சார்பில்விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 1,000 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மெரினா கடற்கரையில் திரும்பிய பக்கமெல்லாம் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. கலங்கரை விளக்கத்தில் இருந்து ஏராளமானோர் கடல் அழகை கண்டு ரசித்தபடி இருந்தனர்.
அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாககடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. கடல் பகுதிக்கு செல்ல முடியாதபடி, கடற்கரை நெடுகிலும் 10 அடிக்கு முன்புமரக்கட்டைகளால் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. உழைப்பாளர் சிலை, காந்தி சிலை அருகே தற்காலிக போலீஸ்கட்டுப்பாட்டு அறைகளும், சர்வீஸ் சாலை நுழைவுவாயில்களில் 11 போலீஸ் உதவி மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
மெரினாவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த டிஜிபி சைலேந்திர பாபு, அங்கு கூடியிருந்தவர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார். பாதுகாப்பாக பண்டிகையை கொண்டாடுமாறு அறிவுரை வழங்கினார்.
தமிழக சுற்றுலா துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் கடந்த 4-ம் தேதி முதல் நடந்து வரும் 47-வது சுற்றுலாதொழில் பொருட்காட்சியும் நேற்று களைகட்டியது. தீவுத்திடலில் குவிந்த மக்கள், பொருட்காட்சியில் நிறுவப்பட்டிருந்த திறந்தவெளி திரையரங்கத்தை ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட உணவகம், 48 அரசுத் துறைகளின் அரங்குகள், பனிக்கட்டி உலகம், சிறுவர் ரயில் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களையும் உற்சாகத்துடன் பார்வையிட்டனர்.
பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நடந்து வரும் ‘சங்கமம்’ கலை நிகழ்ச்சிகளையும் ஏராளமானோர் கண்டு ரசித்தனர். யானை உள்ளிட்ட வன விலங்குகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த சிற்பங்களை ஆர்வத்துடன் கண்டு களித்தனர். அவற்றுடன் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
நந்தனம் புத்தகக் காட்சி, சர்வதேசபுத்தக கண்காட்சி, கேளிக்கை பூங்காக்கள், மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, வடபழனி முருகன் கோயில், பொழுதுபோக்கு மையங்கள், கோவளம் கடற்கரை, முட்டுக்காடு படகுத் துறை, வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
வாராந்திர பராமரிப்பு பணிக்காக செவ்வாய்க்கிழமைகளில் மூடப்படும் கிண்டிசிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல்பூங்கா ஆகியவையும் காணும் பொங்கலையொட்டி நேற்று திறக்கப்பட்டிருந்தன. இங்கு காலை 8 மணி முதல் பார்வையாளர்கள் கூட்டம் அலைமோதியது.
திருச்செந்தூர், பழநி உள்ளிட்ட முருகன்கோயில்கள், மதுரை மீனாட்சி அம்மன்,காஞ்சிபுரம், கும்பகோணம் கோயில்கள்,சிதம்பரம் நடராஜர் கோயில், தஞ்சாவூர் பெரியகோவில், திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில், ஏற்காடு, ஏலகிரி, ராமேசுவரம் பாலம், கோவை குற்றாலம், சிறுவாணி, மாமல்லபுரம், கடலூர், வேளாங்கண்ணி, கன்னியாகுமரி கடற்கரைகள், தனியார்கேளிக்கை பூங்காக்கள் என அனைத்துபகுதிகளிலும் மக்கள் திரண்டு, காணும்பொங்கலை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
அசம்பாவிதங்களை தவிர்க்க, அனைத்து பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.