காணும் பொங்கல்: மெரினாவில் காணாமல் போன 17 குழந்தைகள் மீட்பு

சென்னை: காணும் பொங்கல் கொண்டாட்டத்தின்போது மெரினா கடற்கரையில் கூட்டத்தில் காணாமல் போன 17 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு, பெற்றோர் மற்றும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இது தொடர்பாக சென்னை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காணும் பொங்கலை முன்னிட்டு, மெரினா கடற்கரையில் பொதுமக்கள் குடும்பத்துடன் அதிகளவு வருவார்கள் என்பதால், மெரினா கடற்கரை, அண்ணாசதுக்கம் முதல் கலங்கரை விளக்கம் வரையிலான சர்வீஸ் சாலை மற்றும் கடற்கரை மணற்பரப்பில் திருவல்லிக்கேணி மற்றும் மயிலாப்பூர் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்கள், ஆயுதப்படை, சிறப்பு காவல் படை, ஊர்க்காவல் படை கொண்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

குறிப்பாக, உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை அருகில் 2 தற்காலிக கட்டுப்பாட்டறைகள் அமைக்கப்பட்டு, கடற்கரையில் நிகழும் நிகழ்வுகள், தகவல்கள் சேகரிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டது. கடற்கரை மணற்பரப்பில் 11 தற்காலிக காவல் உதவி மையங்கள், சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் காவல் உதவி மையங்கள் மற்றும் 15 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு மேலும் மெரினா கடற்கரை உயிர்காக்கம் பிரிவுடன் (Anti Drowning Team) இணைந்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டும், சிசிடிவி கேமராக்கள், ஒலி பெருக்கிகள் அமைத்து கண்காணித்தும், காவல்துறை சார்பாக விழிப்புணர்வுகள் ஒலிபரப்பப்பட்டும், பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

மணற்பரப்பில் செல்லக்கூடிய All Terrain Vehicle ஜிப்சி ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து சுற்றி வரப்பட்டும், ஒலி பெருக்கிகள் மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்டும், குற்றவாளிகள் கண்காணித்து, அசம்பாவிதங்கள் நிகழாமல் கண்காணிக்கப்பட்டது. மேலும், டிரோன் கேமராக்கள் மூலம் கூட்டத்தை கண்காணித்து, கடற்கரை மணற்பரப்பில் குற்றங்கள் நிகழாமல் கண்காணிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, நேற்று (ஜன.17) அண்ணா சதுக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரை மணற்பரப்பில் கூட்டத்தில் காணாமல் போன 14 குழந்தைகள் மற்றும் மெரினா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரை மணற்பரப்பில் கூட்டத்தில் காணாமல் போன 3 குழந்தைகள் என மொத்தம் 17 குழந்தைகள் மீட்கப்பட்டு, மேற்படி கட்டுப்பாட்டறை மற்றும் தற்காலிக காவல் உதவி மையங்கள் மூலம் பெற்றோர் மற்றும் உரியவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் கடற்கரை மணற்பரப்பில் மேற்கொண்ட சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மூலம் குற்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.