குடியரசு தின கொண்டாட்டத்தில் புதிய நிகழ்ச்சிகள்!

குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படும். குடியரசு தின விழாவையொட்டி, அன்றைய தினம் டெல்லி ராஜபாதையில் நடைபெறும் விழாவில், பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கலாச்சாரங்களை குறிக்கும் மாதிரிகள் இடம்பெற்ற ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும்.

அந்தவகையில், நாட்டின் 74ஆவது குடியரசு தின விழா வருகிற 26ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அப்போது கடமைப்பாதையில் ஆயுதப்படையினர் மற்றும் துணை ராணுவப்படையினரின் அணிவகுப்பு மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்கள்/ துறைகளின் அலங்கார அணிவகுப்பு, குழந்தைகளின் கலாச்சார நிகழ்ச்சிகள், மோட்டார் சைக்கிள் சாகசங்கள், விமான சாகசம் உள்ளிட்டவை நடைபெற உள்ளன. குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டாஹ் அல் சிசி பங்கேற்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், குடியரசு தின கொண்டாட்டத்தில் ஒரு பகுதியாக புதிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய பாதுகாப்புத்துறை செயலாளர் கிரிதர் அரமானே கூறுகையில், “குடியரசு தின விழா கொண்டாட்டம் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபா சந்திர போஸின் பிறந்த தினமான ஜனவரி 23 ஆம் தேதியன்று தொடங்கி ஒரு வார காலம் நடைபெற உள்ளது. மகாத்மா காந்தியின் நினைவு தினமான ஜனவரி 30ஆம் தேதி தியாகிகள் தினத்தன்று குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நிறைவடையும்.” என்றார்.

சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர்கள், மக்கள், பழங்குடியினர் ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் வகையில் கொண்டாட்டங்கள் இடம்பெறும் என்று அவர் கூறினார். இந்த ஆண்டு குடியரசுத்தின விழா கொண்டாட்டத்தில் பல்வேறு புதிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ராணுவ டாட்டு மற்றும் பழங்குடியினர் நடனம், வீரக்கதைகள் 2.0, வந்தே பாரதம் நடனப் போட்டியின் இரண்டாவது பிரிவு, தேசிய போர் நினைவிடத்தில் ராணுவ நிகழ்ச்சிகள் மற்றும் கடலோர காவல்படையின் இசை நிகழ்ச்சி, அகில இந்திய அளவிலான பள்ளி இசை நிகழ்ச்சி போட்டி, ட்ரோன் காட்சி உள்ளிட்டவை இடம்பெற உள்ளதாக பாதுகாப்புத்துறை செயலாளர் கிரிதர் அரமானே தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.