தமிழகத்திலுள்ள அணைத்து கூர்நோக்கு இல்லங்களிலும் கள ஆய்வு செய்ய ஆணையம் அமைத்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தாம்பரம் கன்னடபாளையம் குப்பை மேடு பகுதியில் வசித்து வரும் கணவனை இழந்த கைம்பெண் பிரியாவின் மகன் கோகுல் ஸ்ரீயை ரயில்வே காவலர்கள் சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரித்து செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி உள்ளார்கள்.
31.12.2022 மாலை 5 மணியளவில் கோகுல் ஸ்ரீ தாய் பிரியாவிற்கு செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து அலைபேசியில் அழைத்து, உன் மகன் பூரி சாப்பிடும் போது வலிப்பு ஏற்பட்டது. அதனால் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனை அழைத்து செல்கிறோம். விரைவில் வரச்சொல்லி உள்ளனர்.
பின்னர் அதே நபர் பத்து நிமிடம் இடைவெளியில் உன் மகன் இறந்து விட்டான் என்று தெரிவித்துள்ளார். இரவு 8 மணி அளவில் செங்கல்பட்டு மருத்துவமனைக்குச் சென்று சிறுவனின் தாய் பிரியா மகனின் உடலை பார்க்க அனுமதிக்காமல் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலரின் உத்தரவின் பேரில் கட்டாயமாக செங்கல்பட்டில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து அவர் யாரிடமும் பேச விடாமல், செல்போனை பறிமுதல் செய்து வைத்துக்கொண்டனர்.
மறுநாள் 2023 ஜனவரி 1 ஆம் தேதி பகல் ஒரு மணி அளவில் ஆட்டோவில் அழைத்துக் கொண்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனை பிணவறைக்கு கொண்டு சென்று இறந்த நிலையில் இருந்த கோகுல் ஸ்ரீயை காட்டியுள்ளனர்.
கீழ் உதடு இரண்டாக கிழிந்து உடல் முழுவதும் கொடூர காயங்கள் இருந்துள்ளது. என் மகன் வலிப்பு நோயால் இறக்கவில்லை. நீங்கள் சித்திரவதை செய்து அடித்து கொலை செய்துள்ளீர்கள் என்று கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.
பின்னர் அங்கிருந்து அவரை மீண்டும் வலுக்கட்டாயமாக அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு கொண்டு சென்று மீண்டும் அவர் வீட்டு காவலில் வைத்து 2.1.23 அன்று கூர்நோக்கு இல்லத்தின் அதிகாரி ஒருவர் வெள்ளைப் பேப்பரில் கையெழுத்து கேட்டு மிரட்டி உள்ளனர்.
இந்தக் கொடுமையான சூழலில் சத்தம் போட்டு வீட்டை விட்டு வெளியேறி மனித உரிமைகளுக்காக போராடி வரும் மக்கள் கண்காணிப்பக செயல்பட்டாளர்களின் உதவியுடன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து முறையிட, அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுக்க அறிவுறுத்தியதின் பேரில் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 3-ம் தேதி செங்கல்பட்டு முதன்மை குற்றவியல் நீதிபதி முன்பு மருத்துவர்கள் சிறுவன் கோகுல் ஸ்ரீ உடலை உடற் கூராய்வு செய்யப்பட்டு, பின்னர் கிண்டியில் உள்ள கிங் மருத்துவ இன்ஸ்ட்டியூட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இரண்டு மருத்துவ அறிக்கையிலும் சிறுவன் கோகுல் ஸ்ரீ கொடூரமாக அடித்து சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அறிக்கை கொடுத்த பின் செங்கல்பட்டு நகர காவல்துறை இதை கொலை வழக்காக மாற்றி லாக்கப் சித்ரவதை கொலையில் சம்பந்தப்பட்ட செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தின் கண்காணிப்பாளர் மோகன், துணை கண்காணிப்பாளர் நித்தியானந்தம், காவலர்கள் சரண்ராஜ், ஆனந்தராஜ், விஜயகுமார், சந்திரபாபு ஆகிய ஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். இதில் பாராபட்சமற்ற நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்த தமிழக காவல் துறை பணி பாராட்டுக்குரியது.
இந்த வழக்கை சட்டம் ஒழுங்கு காவல்துறையில் இருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி, பிரியா சட்ட விரோதமாக அடைத்து வைத்து வெள்ளைத் தாளில் கையெழுத்து கேட்டு மிரட்டியவர்களின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கணவனை இழந்து ஐந்து பிள்ளைகளுடன் ஆதரவற்ற நிலையில் உள்ள விதவைத் தாய் பிரியாவிற்கு தகுந்த பாதுகாப்பும், அவரின் தகுதிக்கு ஏற்ப அரசு வேலைவாய்ப்பும், நிவாரணமும் வழங்கி வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தரவும், தமிழ்நாடு முழுவதும் உள்ள கூர்நோக்கு இல்லங்களை கள ஆய்வு செய்ய ஆணையம் அமைத்து தகுந்த நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசை கேட்டுக்கொள்கின்றேன்” என்று வைகோ தெரிவித்துள்ளார்.