கும்பகோணம்: திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 21-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சாமி.நடராஜன் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: ”தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடி மற்றும் கடலூர் மாவட்டம் சித்தூரில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலைகள், கடந்த 2019-ம் ஆண்டு முதல், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காததால் மூடி கிடக்கிறது. இதில் திருமண்டங்குடி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு சுமார் ரூ.112 கோடி வழங்காமலும், மேலும், சுமார் 6 ஆயிரம் விவசாயிகள் பெயரில் மோசடியாக, ரூ.200 கோடியை 12 வங்கியிலிருந்து கடனாகப் பெற்றுள்ளார்கள். அவர்கள், விவசாயிகளை கடனாளியாக மாற்றியுள்ளனர்.
இந்நிலையில், நிலுவைத் தொகையை வழங்காமலும், விவசாயிகள் பெயரில் போலியாக வங்கியில் வாங்கிய கடனையும் ஆலை நிர்வாகம் ஏற்றுக்கொள்ளாமல், அந்நிறுவனம், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திற்கு சென்று, 2 சர்க்கரை ஆலைகளையும் பொது ஏலத்தில் விட்டனர். இதில், இந்த திருமண்டங்குடி சர்க்கரை ஆலையை கால்ஸ் என்ற புதிய நிர்வாகம் ஏலத்தில் எடுத்துள்ளது. அந்த புதிய நிர்வாகம், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை மற்றும் விவசாயிகள் பெயரில் பெற்ற கடனை குறித்து முடிவெடுக்காமல் இந்த ஆலையை திறக்க முயற்சித்தனர்.
இதனைக் கண்டித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 50 நாட்களாக அந்த ஆலை முன் போராட்டம் நடைபெற்று வருகிறது. இது குறித்து தமிழக முதல்வரிடம் முறையிட்டும் இவர்கள் பிரச்சினை தீரவில்லை. எனவே, விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும், இவர்களை கண்டுகொள்ளாத தமிழக அரசைக் கண்டித்தும், இந்த ஆலையைக் கூட்டுறவுத் துறை மூலம் தமிழக அரசு கையகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி வரும் ஜனவரி 21-ம் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், தமிழகம் முழுவதுமுள்ள கோட்டாட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
மேலும், மத்திய அரசு வரும் ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து, ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த அரிசியை தமிழக அரசு, முழுமையாக ஆய்வு செய்த பிறகு, கடைகளில் வழங்குவது குறித்து முடிவு எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.