தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக, அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ‘மாறன்’, ‘தி கிரே மேன்’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘நானே வருவேன்’ உள்ளிட்ட 4 படங்கள் வெளியானது. இதில், ‘மாறன்’ படுதோல்வியை சந்தித்தது. ‘நானே வருவேன்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், தனுஷின் நடிப்பு பலரையும் கவர்ந்ததுடன், அவருக்கு ஹாலிவுட்டில் நல்ல அறிமுகம் கிடைக்க உதவி செய்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம், 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து, கடந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படங்களில் 7-வது இடத்தைப் பிடித்தது.
இந்நிலையில், தனுஷின் 50-வது படத்தை மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் மற்ற நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை எச் வினோத் இயக்குவரா அல்லது தனுஷே இயக்குவரா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. ஏனெனில், ‘துணிவு’ படத்திற்கான விளம்பரத்தின் நேர்காணல்களில் எல்லாம், நடிகர் தனுஷ்-க்கு கதை ஒன்று சொல்லியிருப்பதாகவும், அவர் உறுதி செய்தால் அவரை இயக்க தயாராக இருப்பதாகவும் இயக்குநர் எச் வினோத் சொல்லியிருந்தார்.
We are happy and proud to announce #D50 with @dhanushkraja#D50bySunPictures #Dhanush50 pic.twitter.com/Y52RUonvUD
— Sun Pictures (@sunpictures) January 18, 2023
அதேநேரத்தில், ‘பா. பாண்டி’ படத்துக்குப் பிறகு தனுஷ் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும், அதில் எஸ்.ஜே. சூர்யா மற்றும் விஷ்ணு விஷால் நடிக்க உள்ளதாகவும், படத்திற்கு ‘ராயன்’ என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் சமீபகாலமாக ஒரு தகவல் உலா வருகின்றது. இதனால் தனுஷின் 50-வது படத்தை அவரே இயக்குவரா அல்லது எச் வினோத் இயக்குவரா இல்லை வேறு யாரேனும் இயக்க உள்ளனரா என்பது இன்னும் ஒருசில தினங்களில் உறுதிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘வாத்தி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. மேலும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.