சென்னை: தமிழ் நிலம் இணையதளத்தில் வருவாய் துறைக்கான புதிய மென்பொருளை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் செயல்படும் நிலஅளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்ககத்தின் தமிழ் நிலம் இணையதளத்தில் (https://tamilnilam.tn.gov.in) நிறுவப்பட்டுள்ள, அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கான உட்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உருவாக்குதல் மற்றும் அதற்கு உண்டான பட்டா மாறுதல் செய்யும் வகையில் புதிதாகமென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல, மாநகராட்சிகள், நகராட்சிகளில் வருவாய் பின்தொடர் பணிக்காகபுதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தலைமைச் செயலர் இறையன்பு, வருவாய் மற்றும்பேரிடர் மேலாண்மை துறைச் செயலர் குமார் ஜெயந்த், நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் டி.ஜி.வினய், தேசிய தகவலியல் மைய துணை தலைமை இயக்குநர் எஸ். கீதாராணி ஆகியோர் உடன் இருந்தனர்.
அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைப் பிரிவில் மனைகளை கிரயம் பெறும்போது, ஒவ்வொருமனுதாரருக்கும் உட்பிரிவு செய்ய, தனித்தனியே மனு பெறும் சூழல் நிலவுகிறது. இவ்வாறு ஒரே மனைப் பிரிவில் உள்ள வீட்டு மனைகளை நிலஅளவை செய்து உட்பிரிவு செய்வதற்காக, நில அளவர் பல்வேறு நாட்களில் தனித்தனியே செல்லவேண்டியுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் 1.50 லட்சம் உட்பிரிவு மனுக்கள் பெறப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை மனைப்பிரிவு சார்ந்தவை. எனவே, உட்பிரிவு பட்டா மாறுதல் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. தற்போது முதல்வர் தொடங்கிவைத்துள்ள புதிய மென்பொருள் மூலமாக மனைப் பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உட்பிரிவு செய்து, அவற்றின் உரிமையாளர் பெயரில் பதிவு செய்யப்படுவதால், பின்னாளில் மனைகளை உட்பிரிவு செய்யக் கோரி தனித்தனியாக மனுக்கள் வரப்பெறுவது தவிர்க்கப்படும்.
மனைப் பிரிவுகள் சார்ந்த உட்பிரிவு மனுக்களின் எண்ணிக்கை குறைந்து, மக்களுக்கு விரைவில் பட்டா வழங்கும் சூழல் ஏற்படும்.
மேலும், பட்டா மாற்றத்துக்காக மக்கள் மீண்டும் தனியேவிண்ணப்பிக்கவோ, வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேரில் செல்லவோ தேவையில்லை.
ஆக்கிரமிப்பு தடுக்கப்படும்: பொதுப் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட சாலைகள், பூங்கா போன்றவையும் தனியே உட்பிரிவு செய்யப்பட்டு, உள்ளாட்சிஅமைப்புகளின் பெயரில் பதிவுசெய்யப்படும். இதனால், அரசுநிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து தடுக்க முடியும். மேலும்,பொதுப் பயன்பாட்டு நிலங்களை மோசடியாக விற்பனை செய்வதும் தவிர்க்கப்படும்.
தற்போது வருவாய் பின்தொடர் பணி நடந்துகொண்டு இருக்கும் 9 மாநகராட்சிகள் மற்றும் 36 நகராட்சிகளின் நகர நிலவரித் திட்ட அலகுகளில் புதிய மென்பொருள் நிறுவப்படும். இதன்மூலம் நகரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிலம் தொடர்பான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள, மேம்படுத்தப்பட்ட நில ஆவணங்கள் இணையதளம் மூலமாக விரைவில் கிடைக்கும். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.