தரமான நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டால் நம் மொழியும் வளம் பெறும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

எப்போது தரமான நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறதோ அப்போது நம்முடைய மொழியும் வளம் பெறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தொழில் வளர்ச்சியில் உலகளாவிய கவனத்தை ஈர்த்தது தமிழ்நாடு. அடுத்ததாக, செஸ் ஒலிம்பியாட் போட்டி மூலமாக உலகளாவிய புகழைப் பெற்றது நம்முடைய தமிழ்நாடு. பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏ.டி.பி டென்னிஸ் தொடரை நடத்திக் காட்டியது தமிழ்நாடு. இதோ இப்போது அறிவுலகத்திலும் – அதாவது புத்தகப் பதிப்பிலும் உலகளவில் தனது சிறகை விரித்திருக்கிறது நம்முடைய தமிழ்நாடு. இதை நினைக்கும்போது உள்ளபடியே பெருமையாகவும், பூரிப்பாகவும் இருக்கிறது.

கடந்த 6 ஆம்-தேதி இதே மைதானத்திற்கு வந்து புத்தகக் கண்காட்சியைத் நான் திறந்து வைத்தேன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட விற்பனைக் கடைகள் இங்கு இடம்பெற்று, ஒரு வார காலமாகப் புத்தக விற்பனையைச் செய்து வருகின்றன. இது 46-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி. இந்த 46 ஆண்டுகளில் இல்லாத ஒன்று இந்த ஆண்டு தொடங்கி இருக்கிறது. அதுதான் பன்னாட்டு புத்தகக் காட்சி.

பதிப்புத்துறை பெரிதும் வளராத காலத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையையும், எங்கெல்ஸ், லெனின், அண்ணல் அம்பேத்கார் உள்ளிட்ட பல அறிஞர்களுடைய நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் தந்தை பெரியார் அவர்கள். உலக அறிவையும், விரிவையும் தமிழர்களுக்குத் தமிழிலேஅளிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அத்தகைய முன்னோடிகளின் கனவை நிறைவேற்றும் காட்சிதான் இந்தப் பன்னாட்டு புத்தகக் காட்சி.

தமிழ்நாட்டில் தமிழாட்சி நடக்கும்போது, இது போன்ற பன்னாட்டுப் புத்தகக் காட்சிகள் நடத்துவது ஒன்றும் வியப்பல்ல. இலக்கியச் செழுமை மிக்க நமது தமிழ்ப் படைப்புகளை உலகமெல்லாம் கொண்டு சேர்க்கவும், உலகெங்கிலும் உள்ள சிறந்த அறிஞர்களின் அறிவு செறிந்த படைப்புகளைத் தமிழில் கொண்டு வரவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.

தந்தை பெரியார் ஓர் உலகத் தலைவர். அவரது சிந்தனைகள் உலகம் முழுவதும் பொருந்தக் கூடியவை. உலகம் முழுமைக்கும் பொதுவானவை. அத்தகைய பெரியாரின் சிந்தனைகளை உலக மொழிகளையும், இந்திய மொழிகளையும் உள்ளடக்கி 21 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட இருக்கிறோம். அதற்கான அடிப்படைப் பணிகள் தொடங்கி இருக்கின்றன.

தமிழ் நூல்களை ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியிட்டுள்ளோம். பல்வேறு மொழிகளிலும் உள்ள நூல்களை தமிழில் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளோம். இந்தப் பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வேகமாக நடைபெற்று வருகின்றன. இவற்றுக்கெல்லாம் மகுடம் சூட்டக்கூடிய வகையில் இந்த பன்னாட்டு புத்தகக் காட்சியை சென்னையில் தொடங்கி இருக்கிறோம். உலகளாவிய அளவில் ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, சீனா ஆகிய நாடுகளில் நடைபெறும் இது போன்ற புத்தகக் காட்சியானது, இப்போது சென்னையில் தொடங்கி இருக்கிறது. இதனை ஆண்டுதோறும் நடத்தி, மிகப்பெரிய அளவில் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதைப் பள்ளிக் கல்வித் துறைக்கு என்னுடைய வேண்டுகோளாக எடுத்துவைக்க நான் விரும்புகிறேன்.

எப்போது தரமான நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறதோ அப்போது நம்முடைய மொழியும் வளம் பெறும். சொற்களும் வலிமை பெறும். புதிய இலக்கியங்கள் மட்டுமல்ல, புதிய சிந்தனைகளும் புதிய சொற்களும் கிடைக்கும். காலம்தோறும் புதிய புதிய சொற்கள் உருவானால்தான் மொழியின் காலமும் நீடிக்கும். தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான க.நா.சுப்பிரமணியம் அவர்கள், ‘ஆங்கிலத்தின் இலக்கிய வளமே மொழிபெயர்ப்பாளர்களால் தான் ஏற்பட்டது’ என்று சொல்லி இருக்கிறார். அந்த வகையில் தமிழுக்கும் பிறமொழிகளில் இருந்து நூல்கள் வர வேண்டும். தமிழ் நூல்களும் பிறமொழிக்கு செல்ல வேண்டும். சில நாட்களுக்கு முன்னால் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் இந்திய இலக்கியம் குறித்து எழுதி இருந்தார்.

இந்திய இலக்கியங்களோடு போட்டி போடும் படைப்புகள் தமிழில் ஏராளமாக வெளியே வந்து கொண்டிருந்தாலும், அது இந்திய அளவில் கவனம் பெறாமல் போனதற்கு என்ன காரணம் என்பது குறித்து அவர் விளக்கி இருந்தார். உண்மையான காரணம் – நமது தமிழ் இலக்கியங்கள் இந்திய மொழிகளிலும், உலக மொழிகளிலும் தரமான முறையில் மொழிபெயர்க்கப்படாமல் இருப்பதுதான். நம்முடைய தமிழ் இலக்கியங்கள் உலகளாவிய இலக்கியங்களாக மாற வேண்டுமானால், உலக மொழிகளில் அவை மொழிபெயர்க்கப்பட வேண்டும். படைப்பிலக்கியத்துக்கு இணையான மதிப்பு மொழிபெயர்ப்பு இலக்கியத்திற்கும் இருக்கிறது. அதற்கு இது போன்ற பன்னாட்டு புத்தக் காட்சிகள் மிகமிகப் பயன்படும். உலகளாவிய அறிவுப் பரிமாற்றமே சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சியின் நோக்கமாக அமைந்திருக்கிறது. இக்கண்காட்சியில் பங்கேற்கும் வெளிநாட்டு பதிப்பாளர்கள் மற்றும் தமிழக பதிப்பாளர்கள் தமிழ் இலக்கியத்தை மையமாகக் கொண்டு காப்புரிமைகளைப் பரிமாறிக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் உலகளாவிய பதிப்புத்துறையினருடன் ஒரு சிறந்த தொடர்பை ஏற்படுத்த இயலும்.

இந்த பன்னாட்டுப் புத்தகக் காட்சியில் பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சுவீடன், தென் கொரியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, வங்கதேசம், அஜர்பைஜான், இஸ்ரேல், உகாண்டா, அர்மேனியா, அர்ஜென்டினா, கனடா, துருக்கி, கென்யா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் வருகை தந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் தமிழ்நாட்டு முதலமைச்சர் என்ற முறையில் அவர்கள் அத்தனை பேரையும் வருக! வருக! வருக! என வரவேற்கிறேன். இங்கு வந்துள்ள பன்னாட்டு பதிப்பாளர்கள் தமிழ்ப் பதிப்பாளர்களுடன் நம்பகமான வணிகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

இங்குள்ள பதிப்புரிமை பரிமாற்று மையத்தில் (Rights table) பங்கேற்கும் நாடுகள், பிற புத்தக வெளியீட்டாளர்கள், இலக்கிய முகவர்கள், புத்தக வெளியீட்டு அமைப்புகள், எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோருடன் பதிப்புரிமையினை விற்கவும் வாங்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. தினந்தோறும் எழுத்தாளர்களுடன் சந்திப்பு, தமிழ் மற்றும் பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு, உலக புத்தகச் சந்தையில் பதிப்புத்துறையின் எதிர்காலம், மொழிபெயர்ப்புத் தொழில்நுட்பம் போன்ற பல தலைப்புகளில் அறிஞர்களின் உரை நிகழ்த்தப்பட்டிருந்தது. இது அறிவுலகச் செயல்பாட்டுக்கு மிக மிக முக்கியம்.

தமிழ் மொழியை உலகெங்கும் எடுத்துச் செல்லும் வகையில் தமிழ் மொழியின் சிறந்த படைப்புகளை உலக மொழிகளிலும் இந்திய மொழிகளிலும் மொழியாக்கம் செய்ய தமிழ்நாடு அரசால் மொழிபெயர்ப்பு மானியமாக 3 கோடி ரூபாய் Translation grant வழங்கப்படும் என்பதையும் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நான் அறிவிக்க விரும்புகிறேன்.” எனக் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.