முந்திக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் – சைலன்ட் மோடில் எடப்பாடி பழனிசாமி!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 23 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா, உடல்நலக் குறைவால் அண்மையில் உயிரிழந்தார். இதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இடைத்தேர்தல் தேதி எந்த நேரமும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், தேர்தல் தேதியினை இன்று அறிவித்தது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம். அதன்படி, பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச் மாதம் 2 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 31 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதை அடுத்து தேர்தல் நடத்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தன. தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சியில் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்கள் மற்றும் பெயர்களை மறைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதற்கிடையே பொது இடங்களில் அரசியல் கட்சி விளம்பரங்கள் அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான சிவகுமார் தெரிவித்து உள்ளார். மேலும் அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகளை மூடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகக் கூறினார்.

இந்நிலையில், வரும் 23 ஆம் தேதி திங்கட்கிழமை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இடைத்தேர்தல் தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி தரப்பு அமைதியாக இருக்கும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக துரிதமாக வேலையைத் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.