மெல்போர்ன்,
ஜோகோவிச் அபாரம்
ஆண்டின் முதல் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 9 முறை சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் ராபர்ட்டா கார்பல்லேஸ் பானாவை (ஸ்பெயின்) தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
கடந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி போடாததால் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட ஜோகோவிச் இந்த சீசனை ரசிகர்களின் உற்சாகமான ஆதரவுடன் வெற்றியோடு தொடங்கியிருக்கிறார். 2-ம் நிலை வீரர் கேஸ்பர் ரூட் (நார்வே) 6-3, 7-6 (8-6), 6-7 (5-7), 6-3 என்ற செட் கணக்கில் தன்னை எதிர்த்த தாமஸ் மச்சாக்கை (செக்குடியரசு) சாய்த்தார்.
முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரர் ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) தனது முதல் சவாலை கடப்பதற்கே 4 மணி 49 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது. அதுவும் கடைசி செட்டில் ‘மேட்ச் பாயிண்ட்’ ஆபத்தில் இருந்து தற்காத்துக் கொண்ட முர்ரே 6-3, 6-3, 4-6, 6-7 (7-9), 7-6 (10-6) என்ற செட் கணக்கில் 14-ம் நிலை வீரர் பெரேட்டினியை (இத்தாலி) வீழ்த்தினார்.
ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), டெய்லர் பிரைட்ஸ் (அமெரிக்கா), ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா), ஹோல்ஜர் ருனே (டென்மார்க்), டிமிட்ரோவ் (பல்கேரியா), டேனியல் இவான்ஸ் (இங்கிலாந்து), ஸ்வாட்ஸ்மேன் (அர்ஜென்டினா) ஆகிய முன்னணி வீரர்களும் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
ஜாபியர்- கார்சியா
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் நிலை வீராங்கனை ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா), தரவரிசையில் 88-வது இடம் வகிக்கும் தமரா ஜிடான்செக்கை (சுலோவேனியா) சந்தித்தார். இதில் தொடக்கம் முதலே தடுமாற்றத்துடன் ஆடிய ஜாபியர் 7-6 (10-8), 4-6, 6-1 என்ற செட் கணக்கில் ஒரு வழியாக வெற்றி பெற்றார். பந்தை வலையில் அடிப்பது, வலுவாக வெளியே அடிப்பது என்று 49 முறை ஜாபியர் தவறிழைத்தது கவனிக்கத்தக்கது.
4-ம் நிலை வீராங்கனை கரோலின் கார்சியா (பிரான்ஸ்) 6-3, 6-0 என்ற நேர் செட்டில் தகுதிநிலை வீராங்கனை கேத்ரின் செபோவை (கனடா) பதம் பார்த்தார். ஒலிம்பிக் சாம்பியன் பெலின்டா பென்சிச் (சுவிட்சர்லாந்து) 6-1, 6-2 என்ற நேர் செட்டில் விக்டோரியா தோமோவாவையும் (பல்கேரியா), பெலாரசின் சபலென்கா 6-1, 6-2 என்ற நேர் செட்டில் மார்ட்டின் கோவாவையும் (செக்குடியரசு) ஊதித்தள்ளினர்.
எலிஸ் மெர்டென்ஸ் (பெல்ஜியம்), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), கோன்டாவெய்ட் (எஸ்தோனியா) ஆகியோரும் 2-வது சுற்றை எட்டினர். மழையால் நேற்று நிறைய ஆட்டங்கள் பாதியில் நிறுத்தப்பட்டன.