தாவோஸ்,:பணவீக்கம் கடந்த ஆண்டே அதன் உச்சத்தை கடந்திருக்கலாம். ஆனால், வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு முடிவே இல்லை என தோன்றுவதாக
பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்ற பொருளாதார நிபுணர்களில் பலர், குறைந்த வருமானம் உள்ளவர்கள் மற்றும் வளரும் நாடுகளில் உள்ளவர்கள், வரவிருக்கும் ஆண்டுகளில் அதிக விலைவாசியுடன் போராட வேண்டியதிருக்கும் என எச்சரித்துள்ளனர்.
பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள், பணவீக்கம், வாழ்க்கைச் செலவு நெருக்கடியுடன் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது என்பதையும், நீண்ட கால அளவில் செலவு நெருக்கடியைத் தணிக்க, பணவீக்கத்தை சமாளிக்க வேண்டியதிருக்கும் என்பதையும் ஒப்புக் கொண்டனர்.
இது குறித்து, பன்னாட்டு நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனர் கோபிநாத் குறிப்பிடும் போது, ”பணவீக்கம் குறைந்தாலும், விலைவாசி அதிகமாக உள்ளது.
ஏனென்றால் பணவாட்டம் இல்லை, பணவீக்கம் குறைவாக உள்ளது; விலைகள் உயர்ந்துள்ளன. குடும்பங்கள் மற்றும் நுகர்வுகளில் ஏற்படும் தாக்கம், நாடுகள் முழுதும் வேறுபடும்,” என எச்சரித்தார்.
‘யுனிலீவர்’ நிறுவனத்தின் தலைவர் ஆலன் ஜோப் இது குறித்து கூறியதாவது:
வாழ்க்கைச் செலவு நெருக்கடியானது, அடிமட்டத்தில் உள்ளவர்களை அதிகம் பாதிக்கிறது. வட்டியை உயர்த்துவது மற்றும் ஊக்கச் செலவுகளை அதிகரிப்பது பற்றி அதிகம் பேசப்படுகிறது.
அதிகரிக்கும் சமத்துவமின்மையின் நீண்டகாலப் போக்கை உடைப்பதற்கான ஒரே வழி, உற்பத்தித் திறனை உயர்த்துவது மட்டுமே என்று நான் நினைக்கிறேன். யுனிலீவர் நிறுவனம், ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தி உள்ளது. மற்றவர்களும் இதே போல் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement