புதுடெல்லி: “சாலை விபத்துகளை 2025-ஆம் ஆண்டுக்குள் 50% அளவுக்கு குறைக்க அனைவரது முயற்சிகளும் அவசியம்” என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
சாலைப் பாதுகாப்பு வாரத்தின் ஒரு பகுதியாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், “சாலை விபத்துக்களை 2025-ஆம் ஆண்டுக்குள் 50% அளவுக்கு குறைக்க அனைவரது முயற்சிகளும் அவசியம். லாரி ஓட்டுநர்களின் வேலை நேரத்தை நிர்ணயிப்பது தொடர்பாக விரைவில் சட்டம் கொண்டுவரப்படும்” என்றார்.
இந்த நிகழ்ச்சியின்போது, திரைப்பட நடிகர் அமிதாப் பச்சன், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாலைப் போக்குவரத்து தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தனர்.
ஜனவரி 11-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நாடு முழுவதும் சாலைப் பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த வாரத்தில் நாடு முழுவதும் சாலைப் பாதுகாப்புத் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.