அதிமுக யாருக்கு? தேர்தல் ஆணையம் நடத்தும் பரீட்சை: ஒதுங்கப் போவது யார்?

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட நிலையில் அரசியல் கட்சிகள் முழு வீச்சில் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அந்த வகையில் ஓ.பன்னீர் செல்வம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்த உள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் அறிவிப்பு!ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கும் எனவும், பிப்ரவரி 7ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 8 ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் என்றும், பிப்ரவரி 10ஆம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெற இறுதி நாள் எனவும், பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெற்று, மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டை இலை யாருக்கு?அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்னும் தீர்ப்பு வெளியாகாத நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல் அறிவிப்பு வந்துள்ளதால் ஓ.பன்னீர் செல்வம் தரப்பும், எடப்பாடி பழனிசாமி தரப்பும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. தீர்ப்பு வெளியாகாத நிலையில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கையெழுத்திட வேண்டிய சூழல் நிலவுவதாக சொல்கிறார்கள்.

கே.வி.ராமலிங்கம் தான் வேட்பாளரா?அப்படியிருக்க இருவரும் இரு துருவங்களாக நிற்பதால் இரட்டை இலை இந்த தேர்தலில் யாருக்கும் இல்லை என்ற நிலை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர். இந்நிலையில் இரு தரப்பும் தங்களது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி தரப்பு தங்களது அணி சார்பில் கே.வி.ராமலிங்கத்தை களமிறக்கலாமா என்று ஆலோசித்து வருவதாக சொல்கிறார்கள்.

பாஜக கொடுக்கும் நெருக்கடி!தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியோ கூட்டணி தர்மப்படி தங்களுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்கிறார்கள். இரட்டை இலை இல்லாவிட்டால் என்ன தாமரை இருக்கிறதே பாஜகவும் எடப்பாடி பழனிசாமிக்கு மெல்ல நெருக்கடி கொடுக்க தொடங்கிவிட்டதாகவும் பேச்சு எழுகிறது.

ஓபிஎஸ் நடத்தும் ஆலோசனை!இந்த சூழலில் ஓ.பன்னீர் செல்வம் தான் நியமித்த மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஜனவரி 23ஆம் தேதி அவர்களுடன் ஆலோசனை நடத்தி எப்படி போட்டியிடுவது, யாரை களமிறக்குவது என்பது குறித்து முடிவெடுக்க உள்ளது. ஆனால் அந்த அணியைச் சேர்ந்த புகழேந்தியோ, இரட்டை இலை சின்னம் எங்களிடம் தான் இருக்கிறது என ஊடகங்களில் பேசி வருகிறார்.

தேர்தல் ஆணையம் வைக்கும் பரீட்சை!தீர்ப்பு யாருக்கு சாதகமாக வருகிறது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் இடைத் தேர்தலில் இரு அணிகளும் என்ன முடிவெடுக்கின்றன? யார் ஒதுங்குவார்கள், யார் சண்டை செய்வார்கள்? என்பதை பொறுத்தே அதிமுக யாருக்கு என்பதை கிட்டதட்ட யூகித்துவிடலாம். ஈரோடு கிழக்குக்கு சட்டமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை நடத்தினாலும் அதிமுகவின் இரு அணிகளில் யார் வெயிட் என்பதை உறுதிபடுத்துவதற்கான பரீட்சையாகவும் இந்த தேர்தலை பார்க்கலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.