அத்திக்கடவு – அவிநாசித் திட்டப்பணிகள்: பிப்ரவரி 15 -ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தின் கீழ் பவானி ஆறு காவிரியுடன் கலக்கும் பகுதியில் அமைந்துள்ள காலிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்திலிருந்து ஆண்டுக்கு 1.50 டி.எம்.சி உபரிநீரை நீரேற்று முறையில் பம்பிங் செய்து நிலத்தடியில் பதிக்கப்பட்டுள்ள பென்ஸ்டாக் குழாய்களின் மூலமாக ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 24,468 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் 32 பொதுப்பணித் துறை ஏரிகளும், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள், 971 குளம், குட்டைகள் என மொத்தம் 1045 ஏரிகள், குளம், குட்டைகளில் நீர் நிரப்பும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது 97 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில்.

இதற்காக பவானி காலிங்கராயன் அணைக்கட்டு, நல்லக்கவுண்டன்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் ஆகிய 6 இடங்களில் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.1605.89 கோடி அளவில் நடைபெற்று வரும் இப்பணிகளையும், நீரேற்று நிலையங்களையும் வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி புதன்கிழமை நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சு.முத்துசாமி கூறியதாவது, “அத்திக்கடவு- அவிநாசி திட்டப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டு ஜனவரி இறுதிக்குள் பணிகள் முடிந்து விடும். 10 நாள்கள் சோதனை ஓட்டம் மேற்கொள்வதாகக் கூறியுள்ளனர். பிப்ரவரி 15 முதல் தண்ணீர் திறந்து விடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தற்போது சிறு, சிறு பணிகள் மட்டுமே நிலுவையில் உள்ளது.

தண்ணீர் கொண்டு செல்லும் பென்ஸ்டாக் குழாய்கள்

சில இடங்களில் கான்கிரீட் போடுவது, லைனிங் போடுவது போன்ற பணிகள் மட்டுமே நிலுவையில் உள்ளது.
அதேசமயம் 6 இடங்களில் நீரேற்று நிலையங்களான பம்பிங் ஸ்டேஷன் பணிகள் முடிவடைந்து விட்டன. 4,5,6 பம்பிங் ஸ்டேசன்களிலிருந்து 1045 குளங்களுக்கு இணைப்பு வழங்கப்படும். தற்போது 750 குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கான பணிகள் முற்றிலுமாக முடிவடைந்து விட்டது. பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் அனைத்து குளங்கள், ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும். இதன் மூலம் 21 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்.

எதிர்காலத்தில் கூடுதல் நிலங்கள் பாசனம் பெறுவதற்கான திட்டமிடப்பட்டு அரசின் அனுமதி பெற்று செயல்படுத்தப்படும்.
இப்போது வரை 97 சதவீதம் பணிகள் நிறைவடைந்து விட்டது. பிப்ரவரி 15 -ம் தேதிக்குள் அனைத்து பணிகளையும் நிறைவு செய்து, இத்திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு அர்ப்பணிப்பார். ஈரோடு வாசவி கல்லூரியில் இந்நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

அத்திக்கடவு-அவிநாசித் திட்டம்

ஈரோடு கிழக்குத் தொகுதியில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி சார்பில் எந்தக் கட்சியின் வேட்பாளருக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “தி.மு.க, காங்கிரஸ் கட்சிகள் ஒரே கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. எந்தக் கட்சியின் வேட்பாளர் போட்டியிடுவார் என்பதை முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்து அறிவிப்பார்” என்றார்.

ஆய்வின்போது ஈரோடு மேயர் சு.நாகரத்தினம், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சந்தோஷினி சந்திரா, துணை மேயர் செல்வராஜ், அறங்காவலர் குழு தலைவர் எல்லப்பாளையம் சிவகுமார், செயற்பொறியாளர் மன்மதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆய்வு நேற்று காலை தொடங்கி மதியம் நிறைவு பெற்றது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.