தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அப்போது இடைத்தேர்தல், தமிழ்நாடு குறித்த ஆளுநர் சர்ச்சை, குஜராத் ரயில் எரிப்பு சம்பவம் போன்றவற்றை குறித்து பேசினார்.
இடைத்தேர்தல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு,
“இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி, ஜி.கே.வாசன் ஆகியோரிடம் தொலைபேசியில் பேசி உள்ளேன். கூட்டணி கட்சியினரிடம் பேசிய பிறகு அதுகுறித்து பாஜக மேலிடத்துக்கு தெரிவிப்பேன். அதன் பின்னர்தான் முடிவு எடுக்கப்படும். தேர்தலில் போட்டியிடுதைவிட கட்சியின் வளர்ச்சிதான் எனக்கு கொடுக்கப்பட்ட பணி. பாஜகவுக்கு கூட்டணி தர்மம் உள்ளது. நியாயம் உள்ளது. ஆகவே இடைத்தேர்தலில் யார் போட்டியிடுவது என்பது குறித்து கூட்டணி கட்சியுடன் பேசி, அந்த தகவல் பாஜக மேலிடத்துக்கு அனுப்பி பின்னர் முடிவு செய்யப்படும்”.
தமிழ்நாடு, தமிழகம் குறித்த ஆளுநர் சர்ச்சை குறித்த கேள்விக்கு,
”தமிழ்நாடு, தமிழகம் குறித்து ஆளுநர் பேசியது ஒன்று இல்லை. சின்ன விஷயத்தை பெரிதாக்குகிறார்கள். அவர் பேசியவிதத்தை வேறு வகையாக புரிந்துகொண்டதாக பார்க்கப்படுகிறது என்று ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இசட் பிரிவு பாதுகாப்பு என்பது எனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஏஜென்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. ஆகவே அச்சுறுத்தல் என்பதை சாதாரணமாக பார்க்கமுடியாது”.
விமான கதவு திறந்திருந்தது குறித்து கேட்கப்பட்டதற்கு,
”விமானத்தில் கதவு திறந்தது டிசம்பர் 10 ஆம் தேதி. 9 ஆம் தேதி புயல் இருந்தது. அன்று சென்னையில் இருந்து திருச்சிக்கு சிறிய ரக விமான சென்றது. அதில் இளைஞர் அணி தேஜஸ்வி சூர்யா மற்றும் நானும் இருந்தோம். அப்போது விமானத்தில் அவசர கால கதவு திறந்து இருப்பதுபோல் இருந்தது என்று கூறினார். பின்னர் விமான ஊழியர்கள் பார்த்தனர். இதுகுறித்து தேஜஸ்வி சூர்யாவிடம் எப்படி நடந்தது குறித்து தான் எழுதி தருமாறு கேட்டனர். தவறுதலாக அது திறந்திருந்தது”.
குஜராத் ரயில் எரிப்பு சம்பவம் குறித்து பிபிசி வெளியிடப்பட்ட வீடியோ குறித்து கேட்டபோது,
”அந்த வீடியோ தவறானது. அதில் உண்மை இல்லை”
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விக்கு..
2022ஆம் ஆண்டு கொலை, கற்பழிப்பு மிக மிக அதிகமாக நடந்துள்ளது. கொரோனா காலம் இருந்த 2021 ஆண்டு தரவுகளை வைத்து சட்டம் ஒழுங்கு குறைவு என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்? வரலாறு காணாத வகையில் 2022 ஆம் ஆண்டில் குற்றங்கள் அதிகமாக நடைபெற்றது. தமிழகம் எப்படி கலவர பூமியாக மாறியது என்பது குறித்து முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும்.
நாள்தோறும் என்னை குறித்து அவதூறு பரப்பும் ஆட்கள் 10 ஆயிரம் பேர் உள்ளனர். டிவிட்டரில் அவதூறாக பதிவிடுவதே அவர்கள் வேலை. திமுக ஐடி விங்கிற்கு இதுதான் வேலை. கட்சியை விட்டு வெளியே சென்றவர்கள் எது பேசினால் என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM