தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலகக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமைவகித்தார். இதில் துணைத் தலைவர்கள் பொன் கிருஷ்ணமூர்த்தி, கோபண்ணா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய கே.எஸ்.அழகிரி, “இந்திய அரசின் பிரதிநிதியாக ஆளுநர் செயல்பட வேண்டும். அரசியல் கட்சியின் பிரதிநிதிபோல் செயல்படக் கூடாது. இந்து மதத்தை பா.ஜ.க-வால் காப்பாற்ற முடியாது. அவர்களால் வெறியை உண்டாக்க முடியும். ஒரு குடும்பத்தை இரண்டாகப் பிரிக்க முடியும். ஆனால், எல்லோரையும் ஒன்றாக இணைக்க ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-வால் முடியாது.
ஆளுநர் தனது நிலையை மாற்றிக்கொள்ளவில்லை. அவர்களிடம் நல்ல சிந்தனை, நல்ல கருத்து, நல்ல தேசம் உருவாக்க வேண்டிய கருத்து என்பது இல்லை. நாங்கள் தோழர்கள், துரோகிகள் அல்ல. எங்களுடைய கூட்டணி கொள்கைரீதியான கூட்டணி. எங்கள் அணியைப்போல் மாபெரும் அணி தமிழ்நாட்டில் இல்லை. ஆளுநரின் வேஷம் நேற்று வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. நம்முடைய கொள்கைரீதியான பரப்புரை மக்களிடம் ஆழமாக பதிந்தால், மதவாதிகள் அழிந்துபோவார்கள்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். அவருக்குச் சிரமத்தைக் கொடுக்க வேண்டும், எதிர்கருத்தைச் சொல்ல வேண்டும் என்பதற்காக மத்திய அரசால் ரவி அனுப்பப்பட்டிருக்கிறார். அவருக்கு எந்த வேலை கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதை அவர் சிறப்பாகச் செய்துவருகிறார். நாம் அதைக் குறை சொல்ல முடியாது. தமிழ்நாடு எப்போதும் மதவாதத்துக்கு எதிரானதுதான்” என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, “ஆளுநர் திரும்பத் திரும்ப சனாதன தர்மம், தமிழ் தர்மம் என்று சொல்கிறார். அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்ன செய்ய வேண்டும் என்று நினைத்ததோ அது நிறைவேறவில்லை. அதனால், ஆளுநர் அதைத் திரும்பப் பெற்றிருக்கிறார். ஈரோடு எங்கள் தொகுதி. மீண்டும் காங்கிரஸ் கட்சிதான் நிற்கும். தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும். எங்களுக்கு ஆதரவு கேட்டு மதச்சார்பற்ற கூட்டணி கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கேட்கவிருக்கிறேன்” என்றார்.