சென்னை: இந்தியை ஒற்றை ஆட்சிமொழியாக அறிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிப்.21-ம் தேதி நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தப்படும் என்று கல்வி பாதுகாப்பு கமிட்டி தெரிவித்துள்ளது.
அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டியின் பொதுச் செயலாளராக இருந்த பேராசிரியர் அனிஷ் குமார் ரே சில மாதங்களுக்கு முன்பு காலமானார்.
இதையடுத்து நடத்தப்பட்ட தேசிய நிர்வாக குழு கூட்டத்தில், கமிட்டியின் பொதுச் செயலாளராக, கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் தருண் காந்தி நஸ்கர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
தொடர்ந்து இக்கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன் விவரம்:
ஆங்கிலத்துக்கு மாற்றாக
ஆங்கிலம் போதிப்பதை நீர்த்துப்போகச் செய்துவிட்டு, அதற்கு பதிலாக இந்தியை பயிற்று மொழியாகவும், ஒற்றை ஆட்சி மொழியாகவும் ஆக்குவதற்கு எதிராக நாடுதழுவிய இயக்கம் நடத்தப்படும். அதன் தொடக்கமாக, தென்னிந்திய மாநிலங்கள் சார்பில் சென்னையில் பிப்.17-ம் தேதி கல்வி பாதுகாப்பு கருத்தரங்கமும், ஆர்ப்பாட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கை
இந்தியை ஒற்றை ஆட்சிமொழியாகவும், பயிற்று மொழியாகவும் அறிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உலக தாய்மொழி தினமான பிப்.21-ம் தேதி கண்டன நாள் அனுசரிக்கப்படும்.
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தப்படும். தேசிய கல்விக் கொள்கை திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு எதிராக மாநிலங்களில் போராட்ட இயக்கங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு கல்வி பாதுகாப்பு கமிட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் பிப்.17-ம் தேதி கல்விபாதுகாப்பு கருத்தரங்கமும், ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும்.