இந்துக்களை ஒன்று சேர்க்கும் விஎச்பி: ’ஹித சின்தக்ஸ்’ குழுக்கள் அமைத்து 69 லட்சம் பேர் சேர்ப்பு

புதுடெல்லி: நாடு முழுவதிலும் உள்ள இந்துக்களை ஒன்று சேர்க்க ‘ஹித சின்தக்ஸ்’ (நன்மை விரும்பிகள்) எனும் பெயரில் புதிய குழுக்களை அமைத்துள்ளது விஷ்வ இந்து பரிஷத்(விஎச்பி). தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலிருந்து சுமார் 69 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பாஜகவின் தாய் அமைப்பாக இருப்பது, ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக். இதன் கிளைகளில் ஒன்றான விஎச்பி, கடந்த நவம்பரில் ஒரு புதிய முகாம் நடத்த உறுப்பினர்கள் சேர்ப்பு நடத்தியது.

ஹித சின்தக்ஸ் என்றழைக்கப்படும் இவர்கள் நாட்டிலுள்ள கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை அனைத்து பகுதிகளில் வாழும் இந்துக்களை ஒன்றிணைப்பார்கள். இவர்கள் சமூகத்திலுள்ள சாதி மற்றும் அதன் பிரிவுகள் பல்வேறாக இருப்பினும் அனைவரும் இந்துக்களே என்ற கருத்தை வலியுறுத்த உள்ளனர்.

இதற்காக, விஎச்பி சார்பில் சுமார் 61 லட்சம் உறுப்பினர்களை தனது புதிய ஹித சின்தக்ஸில் சேர்க்க முடிவு செய்தது. ஆனால், அதை விட அதிக உறுப்பினர்களாக சுமார் 69 லட்சம் பேர் அதில் இணைந்திருப்பதாகத் தெரிந்துள்ளது. இதன் மீது உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் மக்மேளாவில் விஎச்பி கூட்டம் நடத்தியது. இதில், உபியின் அவத் மற்றும் காசி பிரதேசங்களின் கிளைகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில், விஎச்பியின் பசு பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளையும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றுள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் விஎச்பியின் நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘நாடு முழுவதிலும் உள்ள இந்துக்களை ஒன்றிணைக்கும் அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்படும் ஹித சின்தன்ஸ் குழுக்கள் நாடு முழுவதிலும் உள்ள இந்துக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஒன்றிணைவதற்கான அவசியத்தை எடுத்துரைப்பார்கள்.

இதன் பலனாக, நம் நாடு ஒரே கொள்கையில் சர்வதேச அளவில் முன்னிறுத்த முடியும். இக்குழுக்களில் விஎச்பியினருடன் வெளியில் உள்ளவர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.’ எனத் தெரிவித்தனர்.

கடந்த அகாஸ்ட் 29, 1964 இல் துவக்கப்பட்டது விஎச்பி. இந்துக்கள் ஒற்றுமைக்காக துவங்கப்பட்ட இந்த அமைப்பு, உபியின் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியையும் கையில் எடுத்தது. இதற்காக, விஎச்பி சார்பிலான தீவிர போராட்டங்கள் நாடு முழுவதிலும் நடத்தப்பட்டன.

அயோத்தியில் நடைபெற்ற விஎச்பியின் கரசேவையால் அங்கிருந்த பாபர் மசூதியும் கடந்த டிசம்பர் 6, 1992 இல் இடிக்கப்பட்டது. இத்துடன், ஒவ்வொரு முறை மக்களவை தேர்தலுக்கு முன்பாக அதன் சக அரசியல் அமைப்பான பாஜகவின்வெற்றிக்காகவும் விஎச்பி தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.

இதன் களப்பணியானது அதிகம் வெளியில் தெரிவதில்லை. இந்தமுறையும் 2024 மக்களவை தேர்தலுக்காக அதன் சார்பில் ஹித சின்தக்ஸ் எனும் பெயரில் புதிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் உறுப்பினர்கள் உபியில் மட்டும் ஐந்து லட்சத்திற்கும் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவற்றில் அதிகமாக நன்கு படித்தவர்களும், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், முக்கியப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பொதுமக்களின் வாழ்க்கையில் அன்றாடம் ஒன்றி இருப்பவர்கள் இடம் பெற்றிருப்பதாகத் தெரிகிறது.

இவர்கள் மூலமாக தம் சக அரசியல் கட்சியான பாஜகவிற்கு 2024 மக்களவை தேர்தலில் பலன் சேர்க்கும் வாய்ப்புகளும் உள்ளன. இத்துடன், விஎச்பி நாடு முழுவதிலுமான இந்துக்களின் புள்ளிவிவரங்களையும் திரட்ட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.