ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வரும் 23ல் தேமுதிக ஆலோசனை!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து வரும் 23 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட இருப்பதாக தேமுதிக தலைமை அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா, உடல்நலக் குறைவால் அண்மையில் உயிரிழந்தார். இதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே நேற்று, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச் மாதம் 2 ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 31 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதை அடுத்து தேர்தல் நடத்தல் விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், வரும் 23 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட இருப்பதாக தேமுதிக தலைமை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் வரும் ஜனவரி 23 ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. உட்கட்சி தேர்தல், இடைத்தேர்தல், செயற்குழு பொதுக்குழு மற்றும் கழக வளர்ச்சி போன்ற பல்வேறு முக்கிய விஷயங்கள் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கிறது. இந்த கூட்டத்தில் தே.மு.தி.க மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கும் வகிக்கும் தமிழக காங்கிரஸ் கட்சி, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி தங்களுக்கு தான் என அறிவித்துள்ளது. இதே போல் பாஜகவும் தனித்து போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் தேர்தல் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள 14 பேர் கொண்ட பணிக் குழுவையும் நியமித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.