ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளவர்கள் உடனடியாக ஒப்படைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலராக மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் கட்சித் தலைவர்களின் புகைப்படங்கள், சிலைகள், பெயர், விளம்பர பலகைகள் போன்றவை அகற்றும் பணி நடந்து வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு: இத்தொகுதியில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. இதையடுத்து வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் கட்ட சரிபார்க்கும் பணி நேற்று தொடங்கியது.
ஈரோடு கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி திறந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பார்வையிட்டார். பின்னர் அவற்றை பெல் நிறுவனத்தின் மென் பொறியாளர்கள் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். 8 மென் பொறியாளர்கள் பங்கேற்று, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்கனவே பதிவான பதிவுகள், இயந்திரத்தின் செயல்பாடு, கட்டுப்பாட்டு இயந்திரத்தின் செயல்பாடு, யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்வதற்காக பயன்படுத்தப்படும் விவிபேடு உள்ளிட்டவைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறுகையில், ‘தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள அனைத்து துப்பாக்கி உரிமைதாரர்களும் அவர்களிடம் உள்ள துப்பாக்கிகளை (படைகலன்கள்) உடனடியாக சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களிலோ அல்லது உரிமம் பெற்ற தனியார் ஆயுதக்கிடங்குகளிலோ ஒப்படைத்து அதற்கான ரசீதுகளை பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறு ஒப்படைக்கப்பட்டதற்கான ரசீது நகல்களை சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கலாம். தவறும்பட்சத்தில் படைக்கலசட்டம் 1959ன் பிரிவு 30ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவித்தார்.