ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸூக்கு ஒதுக்கிய திமுக! குழப்பத்தில் அதிமுக கூட்டணி

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா அண்மையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மாரடைப்பால் காலமானார். அவரின் மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம், பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

திமுக கூட்டணி

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு, திருமகன் ஈவேரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இப்போது அவரின் மறைவால் அந்த தொகுதி காலியானது. இப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் அந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுமா? என்ற கேள்வி இருந்தது. திமுகவே நேரடியாக களம் காணும் என்றும் கூறப்பட்டது.

கே.எஸ்.அழகிரி பேச்சு 

ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கே.எஸ்.அழகிரி, ஈரோடு கிழக்கு தொகுதி எங்கள் தொகுதி. அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியே மீண்டும் போட்டியிடும். இது குறித்து திமுக உள்ளிட்ட கூட்டடணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்த அவர், தேர்தல் போட்டி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். முடிவில் அந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கீடு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

யார் வேட்பாளர்?

காங்கிரஸ் கட்சி சார்பில் அந்த தொகுதியில் திருமகன் ஈவேரா மனைவி பூர்ணிமா அல்லது அவரது சகோதரர் சம்பத் ஆகியோரில் யாரேனும் ஒருவர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்தி விரைவில் வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் குழப்பம்

அதேநேரத்தில் அந்த தொகுதியில் அதிமுக கூட்டணியில் யார் போட்டியிடுவார்கள்? என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. பாஜகவுக்கும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறது. கடந்த முறை அந்த தொகுதியில் போட்டியிட்டதால் ஜி.கே.வாசனும், தங்கள் கட்சி அங்கு மீண்டும் போட்டியிடுவதை விரும்புகிறார். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகியோருக்கு இடையே பூசல் அதிகரித்திருப்பதால் இரட்டை இலை சின்னம்  பிரச்சனை எழவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் அவர்கள் களம் காண வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா? என்ற ஆலோசனையும் சென்று கொண்டிருக்கிறது. இதனால் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போட்டியிடுபவர்கள் யார்? என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.