ஈரோடு: விவசாய நிலத்தில் கிடந்த புலிக்குத்தி நடுகல், சிவலிங்கம்! வழிபாடும் நடத்தும் மக்கள்

சத்தியமங்கலம் அருகே விவசாயத் தோட்டத்தில் பழமை வாய்ந்த பண்டைய கால மக்களின் வீரத்தை பறைசாற்றும் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த 2 புலிக்குத்தி நடுகல், சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அங்கண கவுண்டன் புதூர் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் புகையிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தோட்ட வேலையின்போது தோட்டத்தின் நடுவில் கல்லினால் ஆன சிவலிங்கம் சிலை, இரண்டு புலிக்குத்தி நடுகல் மற்றும் நந்தி சிலைகள் மண்ணுக்குள் புதைந்து கிடப்பதை கண்ட முனுசாமி, கோவையைச் சேர்ந்த அரண் பணி அறக்கட்டளை குழுவினருக்கு தகவல் தெரிவித்தார்.
image
இதையடுத்து விவசாய தோட்டத்திற்கு வந்த அரண் பணி அறக்கட்டளை குழுவினர், கிராம மக்கள் உதவியுடன் மண்ணில் புதைந்து கிடந்த சிவலிங்கம் மற்றும் இரண்டு புலிக்குத்தி நடு கற்களை தோண்டி எடுத்தனர். பழமையான சிவலிங்கம் சிலையை மரத்தடியில் பீடம் அமைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாட்டுக்கு கொண்டு வந்தனர். சிலை மற்றும் கற்கள் கண்டறியப்பட்ட சம்பவம் குறித்து தகவலறிந்த சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
image
இது குறித்து கோவை அரண் பணி அறக்கட்டளை குழுவினர் கூறியதாவது, ”இங்கு கண்டெுக்கப்பட்ட சிவலிங்கம் ஆதார பீடத்துடன் மூன்றடி உயரமும், இரண்டடி விட்டமும் கொண்டதாக உள்ளது. சிவலிங்கத்திற்கு அருகில் 800 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட செங்கற்களும் கிடைத்தது. அதன் அருகில் மூன்று நந்திகளும் இரண்டு புலிக்குத்தி நடுகற்களும் மண்ணில் புதைந்திருந்தது கண்டெடுக்கப்பட்டது. சத்தியமங்கலம் வனப்பகுதியை ஒட்டியுள்ள இப்பகுதியில் 800 ஆண்டுகளுக்கு முன்பே புலிகள் நடமாட்டம் இருந்ததும், கால்நடைகளை வேட்டையாட வந்த புலிகளுடன் இப்பகுதியிலுள்ள வீரர்கள் சண்டையிட்டு இறந்ததால் அதன் நினைவாக இதுபோன்ற புலி குத்தி நடு கற்கள் நடப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
image
ஒரு நடுகல்லில் புலியை வீரர் ஒருவர் ஈட்டியால் குத்துவது போன்றும், அதில் வேட்டை நாய்கள் மற்றும் வீரரின் மனைவி போன்ற உருவங்களும் இடம் பெற்றுள்ளது. மற்றொரு நடுகல்லில் கூர்வாளால் புலியை குத்துவது போன்ற உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த பகுதியை முழுமையாக தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்” என்றார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.