கீவ்: உக்ரைன் மீது சிறப்பு ராணுவ செயல்பாடு என்ற பெயரில் ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல் போர்த் தாக்குதலை நடத்தி வருகிறது. பதிலுக்கு உக்ரைன் ராணுவமும் ரஷ்யா மீது தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்று உக்ரைன் தலைநகர் கீவ் புறநகர் பகுதியிலிருந்து ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது. இதில் உக்ரைன் அமைச்சர் டெனிஸ் மோனஸ்டயர்ஸ்கி உள்ளிட்ட 20 பேர் இருந்தனர்.
இந்நிலையில் ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களில் புறநகர்பகுதியில் விழுந்து விபத்துக்குஉள்ளானது. மழலையர் பள்ளிமற்றும் குடியிருப்புப் பகுதிக்குள் இந்த ஹெலிகாப்டர் விழுந்துள்ளது.
இந்த விபத்தில் உள்துறை அமைச்சர் டெனிஸ் மோனஸ் டயர்ஸ்கி, உள்துறை அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்தனர். 15 குழந்தைகள் உட்பட 29 பேர் காயம் அடைந்தனர்.
மீட்புப் பணி..: இந்த ஹெலிகாப்டர் உக்ரைன் நாட்டின் அவசர சேவை பிரிவைச் சேர்ந்தது. விபத்துக்கான காரணம்தெரியவில்லை. கீவ் நகர ஆளுநர்ஒலக்சி குலேபா கூறும்போது, “ஹெலிகாப்டர் பள்ளிக் கட்டிடத்தின் அருகே விழுந்த போது பள்ளியில் சிறுவர்களும், ஆசிரியர்களும் இருந்தனர். இதனால் அதிகஅளவில் குழந்தைகள் காயமடைந்தனர். அப்பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன’’ என்றார்.
இதுதொடர்பாக அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘‘ஹெலிகாப்டர் விபத்தில் அமைச்சர் உட்பட18 பேர் உயிரிழந்தது சொல்லமுடியாத வலியை ஏற்படுத்தி யுள்ளது. இது ஒரு பயங்கரமான சோக சம்பவம் ஆகும். என்ன நடந்தது என்பதற்கான அனைத்து சூழ்நிலைகளையும் கண்டறியுமாறு உக்ரைனின் தேசிய காவல்துறை மற்றும் பிறஅமைப்புகளுக்கு உத்தரவிட் டுள்ளேன்.
இந்த விபத்தில் இறந்த அனைவரின் குடும்பத்தாருக்கும் என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.