உறவினருக்கு மதுப்பழக்கம் உண்டாக்கியவர் அடித்துக்கொலை – இளைஞர்களின் நாடகம் விசாரணையில் அம்பலம்!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் துப்புரவு சிப்பந்திகாலனி பகுதியில் வசித்துவருபவர்கள் ராஜ்-மாரியம்மாள் தம்பதி. இவர்களின் மகன் சேதுராஜ் (வயது 18). படிக்க மனமின்றி ஊரில் கூலிவேலை செய்துவந்தார். இந்த நிலையில், பொங்கல் தினத்தின்று இரவில் வீட்டிலிருந்து மாயமான சேதுராஜ், கடந்த 16-ம் தேதி வாலாங்குளம் கண்மாயில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக மம்சாபுரம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். போலீஸின் முதற்கட்ட விசாரணையில், மதுபோதையில் சேதுராஜ் கண்மாய் நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இருப்பினும் உயிரிழந்த சேதுராஜ் மீது பல்வேறு குற்றவழக்குகள் பதிவாகியிருப்பதால், அவர் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ரகசியமாக விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தோம். “வீட்டிலிருந்து மாயமான சேதுராஜ், அவருடைய உறவினர் மகனான கார்த்திக்குடன் சேர்ந்து வாலாங்குளம் கண்மாய்க்கரையில் ஒன்றாக மது அருந்தியிருக்கிறார்.

சேதுராஜ்

இதைப் பார்த்த கார்த்திக்கின் சித்தப்பா மகன் கருப்பசாமி, தன்னுடைய நண்பர் வீரமணியுடன் சேர்ந்து அங்கு சென்றிருக்கிறார். அப்போது, சேதுராஜ், கார்த்திக் இருவரும் மது அருந்தவே, கார்த்திக்கை குடிக்க வைத்து பாழாக்குவது நீதான் என்றுக்கூறி சேதுராஜுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். ஒருகட்டத்தில் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியிருக்கிறது. இதில் போதையிலிருந்த சேதுராஜ் கீழே சரிந்து விழவும், கருப்பசாமியும், வீரமணியும் சேர்ந்து அவரைக் கடுமையாகத் தாக்கியத்தில் சேதுராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். இதை மறைப்பதற்காக உயிரிழந்த சேதுராஜை கண்மாய் நீரில் தூக்கி எறிந்துவிட்டு ஒன்றுமே நடக்காததுபோல் ஊருக்குள் வலம் வந்திருக்கின்றனர். போலீஸ் விசாரணையின்போதும், `போதை தலைக்கேறிய நிலையில் பலநேரம் கீழே விழுந்திருக்கிறான்’ என திசைதிருப்பிப் பேசினர். மேலும், சொந்தத்துக்குள் நடந்த கொலைச் சம்பவம் என்பதால் உறவினர்களும் இதை மறைக்க முயன்றிருக்கின்றனர்.

ஆனால் ஊர்வாசிகளிடம் விசாரணை நடத்தியபோது, சேதுராஜ், கார்த்திக் இருவரும் ஒன்றாக மது அருந்தியதையும், அந்த சமயம் கருப்பசாமி, வீரமணி இருவரும் அங்கு சென்றதையும் பார்த்திருக்கின்றனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இளைஞர்களைப் பிடித்து விசாரணை நடத்தியதில், சேதுராஜை அடித்துக் கொலைசெய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர்” எனத் தெரிவித்தனர். இதையடுத்து, சந்தேக மரண வழக்காகப் பதிவுசெய்யப்பட்டிருந்த சேதுராஜ் மரணம், கொலைவழக்காக மாற்றி பதிவுசெய்யப்பட்டு கருப்பசாமி, வீரமணி இருவரும் கைதுசெய்யப்பட்டனர். தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் விருதுநகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.