திருவனந்தபுரம்: ஜி-20 அமைப்புக்கு இந்தியா கடந்த டிச. 1-ம் தேதி தலைமை பொறுப்பை ஏற்றது. ஜி-20 சுகாதார செயற்குழு கூட்டம் திருவனந்தபுரத்தில் நேற்று தொடங்கி நாளை வரை நடை பெறுகிறது. இதில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் பேசியதாவது:
கரோனா பெருந்தொற்று, இறுதி தொற்றாக இருக்காது. அதனால் அவசர நிலையை எதிர்கொள்ளும் தயார் நிலைக்கு நாம் அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும். கரோனா போன்ற நெருக்கடிகளில் இருந்து மக்களை பாதுகாக்க உலகம் முழுவதும் உறுதியான சுகாதார கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இது போன்ற உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல் ஏற்பட்டால் நாம் இணைந்து செயல்படுவது அவசியம். வளர்ந்து வரும் அறிவியல் ஆதாரங்களுடன், நமது திறன்களை பல்வகைப்படுத்தி, முன்னெச்சரிக்கை முறைகளை வலுப்படுத்த வேண்டும்.
ஒன்றோடொன்று பிண்ணி பிணையப்பட்ட உலகில், நெருக் கடியான சூழல் ஏற்பட்டால், அதில் இருந்து மக்கள் மீள்வதையும், அவர்களின் பாதுகாப்புக்கு சம வாய்ப்புகள் கிடைப்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு இணை அமைச்சர் பேசினார்.