கருத்து வேறுபாடு இருந்த நிலையில் ஒன்றிய அரசால்தான் அதிமுக ஆட்சி நீடித்தது: நயினார் நாகேந்திரன் பேட்டி

நெல்லை: ‘ஒன்றிய அரசு உதவியால்தான் அதிமுக ஆட்சி 4 ஆண்டு நீடித்தது’ என்று பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லை தச்சநல்லூரில் நேற்று நடந்த விழாவில் பங்கேற்ற நெல்லை தொகுதி பாஜ எம்எல்ஏ நயினார்  நாகேந்திரன் அளித்த பேட்டி: தமிழகம் என்பதும் தமிழ்நாடு என்பதும் ஒன்று தான். அதில்  வித்தியாசம் ஒன்றும் இல்லை. பாஜ மக்களவை தேர்தல் பணியை துவங்கி விட்டது. ஒன்றிய அமைச்சர் விகே சிங் வருகிற 27, 28, 29 தேதிகளில் வருகிறார். யார்  எப்படி பேசினாலும், ஒருமித்த அதிமுகவின் பலம் வேறு. அதிமுகவைச்  சேர்ந்தவர்கள் தனியாக போட்டியிட்டால் அது பலவீனம்தான். பாஜ பலம் அடைய வேண்டும் என நினைத்திருந்தால்  எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியிருக்க மாட்டோம்.

அதிமுகவில்  கருத்து வேறுபாடு இருந்த போது ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதற்காக  நாங்கள் தான் முழுமையாக 4 ஆண்டுகள் ஆதரவு கொடுத்தோம். ஒன்றிய அரசு ஆதரவில்  தான் 4 ஆண்டுகள் அதிமுக ஆட்சி நடந்தது.  இன்று வரை அதிமுக – பாஜ  கூட்டணி தான் உள்ளது. எங்களது தலைமையில் தான் மக்களவை தேர்தல் கூட்டணியா  என்பதை முடிவு செய்ய தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. இப்போதே  கூட்டணியை கூறி விட்டால் நன்றாக இருக்காது. இவ்வாறு நயினார்  நாகேந்திரன் தெரிவித்தார். ஏற்கனவே, கூட்டணிக்குள் கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், நயினார் நாகேந்திரன் பேச்சு கூட்டணிக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.