திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் அறிக்கை:
ஜல்லிக்கட்டு வீரருக்கும், மாட்டின் உரிமையாளருக்கும் முதல் பரிசாக, கார் வழங்குகின்றனர். வழங்கப்படும் பரிசுகளை பற்றி அரசு சிந்திக்க வேண்டியுள்ளது… கடந்த ஆண்டுகளில் கார் பரிசு பெற்ற வீரர்கள், எந்த அளவு வாழ்க்கையில் உயர்ந்திருக்கின்றனர்;
எந்த மாதிரியான வாழ்க்கையை, தற்போது அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதை பார்க்க வேண்டும். காரின் தொகைக்கு ஈடாக அந்த வீரனுக்கு உழவுத் தொழில் தொடர்பான கருவிகள், மாடுகள், நிலம் தந்து, வாழ்வுக்கு முன்னேற்றம் ஏற்படுத்திதந்தால், கூடுதல் மகிழ்ச்சி அடையலாம்.
நிச்சயமாக பரிசீலிக்கப்பட வேண்டிய நல்ல யோசனை… ஆனா, கார், பைக்கை பரிசா தந்தா தானே இளவட்டம் விரும்புவாங்க… அந்தந்த கம்பெனிகளிடம், ‘ஈசியா ஸ்பான்சரும்’ வாங்க முடியும்?
தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை:
வியாபாரிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கக் கூடிய சங்க தலைவர்களை, எம்.எல்.ஏ., ‘சீட்’ கொடுத்து, வாயை அடைத்து விட்ட தைரியத்தில், குரல் இல்லாத வியாபாரிகளின் குரல் வளையை நெரிக்கத் துணிந்துள்ளது, தி.மு.க., அரசு. தொழில் வரி கட்ட வியாபாரிகளுக்கு ஆறு மாதம் முதல் ஓராண்டு வரை கால அவகாசம் தர வேண்டும். வியாபாரிகளை நசுக்க முயன்றால், தமிழக பா.ஜ., அவர்களுக்கு ஆதரவாக பெரும் போராட்டத்தை முன்னெடுக்க தயங்காது.
தமிழக அரசுக்கு எச்சரிக்கை கொடுக்கிற அதே அறிக்கையில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவையும் கலாய்ச்சிட்டாரே!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
‘இந்தியாவின் வருமானத்தையும், வளர்ச்சியையும் பெருக்குவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, ஏழை மக்களை கசக்கிப் பிழிகிறது’ என்று, ‘ஆக்ஸ்பாம்’ தொண்டு நிறுவன ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
உலகின் பெரும்பான்மையான நாடுகளில், ஜி.எஸ்.டி., வரி, 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது; இந்தியாவில் தான், 5, 12, 18, 28 சதவீதம் என, நான்கு அடுக்குகளாக வசூலிக்கப்படுகிறது. பணக்காரர்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு அதிக வரியும், ஏழைகள் பயன்படுத்தும் பொருட்களுக்கு குறைந்த வரியும் விதிக்கும் வகையில், ஜி.எஸ்.டி., வரி விதிப்பை அரசு மாற்ற வேண்டும்.
அப்படியே அது எந்தெந்த பொருட்கள்னு ஒரு பட்டியல் போட்டு, அன்புமணியை ஒரு எட்டு டில்லிக்கு போய், பிரதமரிடம் மனுவா கொடுத்துட்டு வர சொல்லலாமே!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
தி.மு.க., அங்கம் வகித்த, காங்., ஆட்சியில் சேது சமுத்திர திட்டத்திற்காக, கடலை ஆழப்படுத்திய போது எடுக்கப்பட்ட பல கோடி, ‘டன்’ மணலை எங்கே கொட்டினர்; அதன் வாயிலாக, அரசுக்கு கிடைத்த வருவாய் எவ்வளவு என்பதை, டி.ஆர்.பாலு விளக்க வேண்டும்.
‘அள்ளிய மணலை எல்லாம், ராமேஸ்வரம் கடற்கரையிலகொட்டினோம்’னு சொல்வாங்க… நாம மறுக்க முடியுமா?
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்