கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவரும், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகியுமான காசியண்ணன் ஈரோடு, வேப்பம்பாளையத்தில் உள்ள அவரது ஏ.இ.டி. பள்ளியில் உள்ள அவரது இருப்பிடத்தில் நேற்று காலமானார்.
விவசாயிகள் நலனுக்காக பல்வேறு போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட காசியண்ணனுக்கு திருமணமாகவில்லை. அனைத்துக் கட்சி நிர்வாகிகளாலும் மதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கத் தலைவராக திகழ்ந்த அவருக்கு பல்வேறு கட்சிகளின் பிரமுகர்களும், பல்வேறு விவசாய அமைப்புகளின் நிர்வாகிகளும், பொதுமக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, தமிழக விவசாயிகள் சங்கத்தின் (கே.சி.ரத்தினசாமி பிரிவு) மாநிலத் தலைவர் கே.சி.ரத்தினசாமி, தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கி.வெ.பொன்னையன் உள்ளிட்ட பலரும் அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அவருக்கு அஞ்சலி தெரிவித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது, “கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவரும், உழவர்களின் பாதுகாவலராகத் திகழ்ந்தவருமான காசியண்ணன் மறைந்தார் என்ற செய்தியை அறிந்து தாங்க முடியாத அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
25 ஆண்டுகளாக கூட்டமைப்பின் தலைவர் பதவியை மிகச் சிறப்புடன் செயல்படுத்தி, கீழ்பவானி பாசனத்தில் உள்ள 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களுக்கு நீர் மேலாண்மை செய்வதற்கும், விவசாயிகளின் அனைத்துப் பிரச்னைகளுக்காக தமிழ்நாட்டிலும், தில்லியிலும் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்திலும் தவறாமல் கலந்து கொண்டு, அனைத்துத் தலைவர்களையும் சந்தித்து கோரிக்கைகளை வைத்து வந்தவர்.
குறிப்பாக அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது என்னுடைய ஆலோசனையின் பேரில் கணேசமூர்த்தி எம்.பி.யுடன் சென்று வாஜ்பாயைச் சந்தித்து, பாசன மேம்பாட்டு நிதியைப் பெறுவதற்கு முன்னின்று செயல்பட்டார்.
அதன் மூலம் ரூ. 4 கோடியை கீழ்பவானி பாசனத் திட்டத்திற்கு பெற்றுக் கொடுத்தவர் காசியண்ணன் ஆவார். இந்தியா முழுவதும் உள்ள கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி, 1,000 பேரை தனி ரயிலில் கணேசமூர்த்தி எம்.பி.யின் உதவியோடு சென்னையில் இருந்து வழி அனுப்பி வைத்தேன்.
ஈரோட்டில் அவர் முன்னின்று நடத்தி வந்த அம்மணியம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற பள்ளியில் கிராமப்புற மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் பயிலவும், ஏழை வீட்டுப் பிள்ளைகள் கட்டணம் இன்றி பயிலவும் வழி வகை செய்தவர்.
மதுவுக்கு எதிராக நான் பிரசார நடைபயணம் மேற்கொண்ட போது, என்னுடன் நடைபயணத்தில் வந்த அனைவரையும் அவரது பள்ளியிலேயே தங்க வைத்தார். மறுநாள் காலையில் பள்ளி மைதானத்திலேயே தொண்டரணி பயிற்சி நடைபெற்றது.
காசியண்ணன் திருமணம் செய்து கொள்ளவில்லை. கோடிக்கணக்கான சொத்துகளுக்கு உரியவராக இருந்தாலும் மிகவும் எளிமையாக வாழ்ந்தவர்
நான் ஈரோடு செல்லும் போதெல்லாம் என்னைச் சந்தித்து விவசாயிகள் கோரிக்கைகளைக் கூறுவார்.
பண்பாட்டுச் சிகரமான காசியண்ணன் மறைவு விவசாயிகளுக்கு மட்டுமல்ல, மனிதநேயத்திற்கும் பேரிழப்பாகும்.
அவரது மறைவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள உற்றார் உறவினர்களுக்கும், விவசாய பெருமக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கி.வெ.பொன்னையன் நம்மிடம் கூறியது,
“1980களில் நாராயணசாமி நாயுடு தலைமையில் நடைபெற்ற போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி விவசாய சங்கங்களுக்குள் வந்தவர் காசியண்ணன். பொதுவான மக்கள் போராட்டங்களிலும், விவசாயிகள் போராட்டங்களிலும் தொடர்ந்து பங்கேற்றவர். கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றி அச்சங்கத்தின் இரண்டாவது தலைவராக பொறுப்பேற்று 25 ஆண்டுகாலமாக வழிநடத்தி வந்தவர். கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தின் ஆரம்பத்தில் இருந்து கடைமடை வரையிலும் உள்ள ஒவ்வொரு விவசாயிகளுடன் தொடர்பில் இருந்தவர். விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்காக தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டவர்.
கீழ்பவானி பாசனத்திட்டப் பணிகளில் கேரளம், கர்நாடக மாநிலங்களில் இருந்து பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் முன்னின்று சட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு, அதற்கான தீர்வை காண்பதில் முக்கியப் பங்காற்றியவர். தில்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்திலும் பங்கேற்றவர். பட்ஜெட் தயாரிப்புப்பணிகளில் முன்பே பங்கேற்று அரசுக்கு பல்வேறு ஆலோசனைகளைக் கூறியவர்.
கீழ்பவானி பாசன மேம்பாட்டுக்காக 1998இல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, அவரை நேரடியாக சந்தித்து அந்த நிதியை பெற்றதோடு நாடு முழுவதும் உள்ள பாசன கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நிதியை பெற்றுத் தந்ததில் அவரது பங்கு முக்கியமானது. அவரது இழப்பு விவசாயிகளின் பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்.”
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.சி.ரத்தினசாமி கூறியது
“விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்காக போராடிய போதெல்லாம் அந்த போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் காசியண்ணன். அவர் நிறுவிய அம்மணியம்மாள் கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கி வந்த அவரது தனியார் பள்ளியில் ஏராளமான ஏழை மாணவர்கள் கல்விக் கட்டணம் இன்றி படிக்க பேருதவி செய்தவர்.
எல்லா அரசுப்பள்ளிகளுக்கும் அவ்வப்போது பல்வேறு உதவிகளையும் செய்து வந்தவர்.
சிறந்த மனிதநேயர். எல்லோரும் அவரை எளிதில் அணுக முடியும். மிக எளிமையாக மக்களோடு மக்களாக வாழ்ந்த மாமனிதர். அவரது இறப்பு ஈரோடு மக்களுக்கு மட்டுமல்ல, அனைத்துத் தரப்பு விவசாயிகளுக்கும் பேரிழப்பாகும்.”