கோவை: ‘தமிழ்நாட்டில் 4 லட்சம் பேருக்கு ஒன்று வீதம் உள்ள தாலுகா அலுவலகங்கள் மேலும் குறிப்பிட்ட அளவுக்கு அதிகரிக்கப்படும்’ என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசினார். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வருவாய்த்துறை அலுவலர்களுக்கான பணி ஆய்வுக் கூட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அளித்த பேட்டியில், ‘4 லட்சம் பேருக்கு ஒரு தாலுகா அலுவலகம் உள்ளது. குறிப்பிட்ட அளவிற்கு தாலுகா அலுவலகங்கள் அதிகரிக்கப்படும்.
எந்த மனுக்களாக இருந்தாலும் 15 நாட்களுக்கு மேல் இருக்கக்கூடாது. அதற்குள் முடித்து தர முயற்சித்து வருகிறோம். இ-சேவை மையத்தில் சில தவறுகள் நடப்பதாக கவனத்திற்கு வந்துள்ளது. அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகளில் கேரள அரசு நில அளவீடு செய்ததாக கூறுவது தவறு, எங்களது கவனத்திற் வராமல் அளவீடு செய்யக்கூடாது என கேரள அரசிடம் கூறியுள்ளோம். கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளது. நிலங்களை கையகப்படுத்த கூடுதல் இழப்பீடு தருகிறோம்’ என்று தெரிவித்தார்.