வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் மொத்தம் 60 சட்டமன்ற தொகுதிகளில் இருக்கின்றன. இதற்கான தேர்தல் வரும் பிப்ரவரி 16ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ஆம் தேதி நடக்கிறது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 31 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சிக் கட்டிலில் அமரும். அந்த வகையில் 2018ல் நடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்ட ஆட்சிக்கு முடிவு கட்டி பாஜக முதல்முறை ஆட்சியை பிடித்தது.
வடகிழக்கில் பாஜக
1993ல் தொடங்கி 2018 வரை தசரத் தெப்பர்மா (5 ஆண்டுகள்), மாணிக் சர்கார் (20 ஆண்டுகள்) என இரண்டு கம்யூனிஸ்ட் முதல்வர்கள் பதவியில் இருந்துள்ளனர். இந்நிலையில் கடைசியாக நடந்த தேர்தலில் வடகிழக்கில் பாஜகவிற்கு செல்வாக்கு கிடையாது என்ற பிம்பத்தை உடைத்து, நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பரந்து விரிந்த கட்சி என்ற அடையாளத்தை பெற்றது.
அதிருப்தி மனநிலை
தற்போது பாஜக வெற்றிகரமாக 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்யப் போகிறது. இதையொட்டியே சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பாஜக 2018ல் ஆட்சி பொறுப்பேற்றதும் பிப்லாப் குமார் தேப் அவர்கள் மாநில முதல்வராக பதவி வகித்து வந்தார். இந்த சூழலில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தி மனநிலை காரணமாக கடந்த ஆண்டு அவரை மாற்றம் செய்து பாஜக தலைமை அதிரடி காட்டியது.
களமிறங்கும் திப்ரா மோதா
இதையடுத்து மாணிக் சாகா முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். ஏற்கனவே இருமுனை போட்டியாக பாஜக,
காங்கிரஸ்
– இடதுசாரிகள் ஆகியோர் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் மூன்றாவது கட்சியாக திப்ரா மோதா (TIPRA Motha) உத்வேகம் காட்டி கொண்டிருக்கிறது. இது திரிபுரா காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் பிரத்யோத் பிக்ராம் மாணிக்யா தெப்பர்மா தொடங்கிய அரசியல் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
தனி மாநில கோரிக்கை
இவர் திரிபுராவில் உள்ள பல்வேறு இனக் குழுக்களை இணைத்து ”திப்ராலாந்த்” என்ற பெயரில் தனி மாநில கோரிக்கையை முன்வைத்து குரல் கொடுத்து வருகிறார். இவர்கள் மொத்தமுள்ள 60 தொகுதியில் 20ல் பெருவாரியாக காணப்படுகின்றனர். எனவே தன்னுடைய தனி மாநில கோரிக்கையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி வைக்க தயார் என பிரத்யோத் பிக்ராம் கூறி வருகிறார். தற்போது IPFT உடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டபுள் எஞ்சின் வளர்ச்சி
மேலும் சில சிறிய கட்சிகள் போட்டியிட தயாராகி வந்தாலும், திரிபுரா சட்டமன்ற தேர்தல் களம் மும்முனை போட்டியாக அமைய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாஜக மாநில முதல்வர் மாணிக் சாகா கூறுகையில், எங்கள் தேர்தல் அறிக்கை என்பது இதுவரை இல்லாத அளவிற்கு மாபெரும் வளர்ச்சியை பெறக்கூடிய வகையில் இருக்கும். மத்திய, மாநில அரசுகள் கைகோர்த்து டபுள் எஞ்சின் முறையிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.