சென்னை: திருப்பூரில் ஜன.22-ம் தேதி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி எஸ்டிபிஐ கொடுத்த மனுவை நிராகரித்துவிட்டதாக கூறிய அரசு தரப்பு வாதத்தை ஏற்று, இந்நிகழ்வுக்கு தடை கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், இந்து முன்னேற்றக் கழக தலைவர் கோபிநாத் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “கடந்தாண்டு மத்திய அரசு பாப்புலர் ப்ஃரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 வருட காலம் தடை செய்து உத்தரவிட்டது. மத்திய அரசால் ஐந்தாண்டு காலம் தடை செய்யப்பட்ட பாப்புலர் ப்ஃரண்ட் ஆஃப் இந்தியா இந்தியாவின் நிறுவனரான அபூபக்கர் என்பவர் தான் எஸ்டிபிஐ அமைப்புக்கும் நிறுவனராக இருந்து வருகிறார்.
பாஜக மற்றும் இந்து அமைப்பினர் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட வழக்கில் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த சரோஸ் கான், சையத் இப்ராஹிம், ஆகியோர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் இந்துக்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதியில் , போக்குவரத்து நெரிசலான இடமான யுனிவர்சல் தியேட்டர் ரவுண்டானா அருகில் வரும் 22-ம் தேதி எஸ்டிபிஐ கட்சி சார்பாக ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் இஸ்லாமிய தலைவர்கள் விரும்பத்தகாத வகையில் பேசக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் மட்டுமின்றி, இரு மதத்தினருக்கு இடையே வெறுப்புணர்வை அந்த பேச்சுகள் ஏற்படுத்தக்கூடும். எனவே இந்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி கடந்த 3-ம் தேதி எஸ்டிபிஐ சார்பில் கொடுக்கப்பட்டுள்ள மனுவை திருப்பூர் மாநகர காவல் துறை ஆணையர் நிராகரிக்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், “பேரணி – பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரி எஸ்டிபிஐ சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு ஜனவரி 17-ம் தேதி நிராகரிக்கப்பட்டு விட்டது” என்று தெரிவித்தார்.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.