புதுடெல்லி: படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் ஒரு மணி நேரத்துக்கு 220 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வரும் வந்தே பாரத் அதிவேக ரயிலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை இருக்கை வசதிகள் மட்டுமே கொண்ட வந்தே பாரத் ரயில்களில் படுக்கை வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ரயில்கள் ஒரு மணி நேரத்துக்கு அதிகபட்சமாக 220 கி.மீ. தூரம் செல்லும் வகையில் அலுமினியத்தால் வடிவமைக்கப்பட உள்ளது.
படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் சதாப்தி ரயில்களாக மாற்றப்படும். அதே போல், படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் ராஜ்தானி விரைவு ரயில்களுக்கு மாற்றாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே 400 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ரயில்வே துறையின் ஒப்பந்தம் கோரியுள்ளது. இதனை தயாரிக்க 4 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் முன் வந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.