பல்லடம்: பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் கணவன்-மனைவி கழுத்தை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள அனுப்பட்டி ஊராட்சி வேலப்பகவுண்டம்பாளையம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ரேடியேட்டர் திருட்டு சம்பவம் நடந்தது. இதை திருடியதாக மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த பாண்டி என்பவர் மகன் கருப்புசாமி (29) என்பவரை காமநாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 45 நாட்கள் சிறையில் இருந்த கருப்பசாமி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். ஆனால் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திடாமலும் நீதிமன்றத்தில் ஆஜராகாமலும் இருந்து வந்ததார். இதனால் கருப்புசாமிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து பல்லடம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜராக கருப்புசாமி வந்திருந்தார். ஆவணங்கள் எதுவும் இன்றி கருப்புசாமி நீதிமன்றத்தில் ஆஜரானதால் தனக்கு தண்டனை கிடைத்து விடுமோ என்று அவர் பயமடைந்ததாக தெரிகிறது. எனவே, அவர் நீதிமன்ற வளாகத்தில் கிடந்த பிளேடை எடுத்து தனது கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்ட அவரது மனைவி மஞ்சுளாவும் தனது கையை அறுத்து கொண்டார். இதனை கண்ட போலீசார் உடனடியாக இருவரையும் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.