புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரையின் தெற்கு பக்கமும் செயற்கை கடற்கரை அமைப்பதற்கான விரிவான செயல் திட்ட அறிக்கையை தேசிய கடலோர ஆய்வு மையம் சமர்ப்பித்துள்ளது.
புதுச்சேரி கடற்கரையில் கடந்த 25 ஆண்டிற்கு முன் பரந்து விரிந்த இயற்கை மணல் பரப்புடன் கூடிய அழகிய கடற்கரை இருந்தது. மணல் பரப்பில் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர். கடலரிப்பால் இயற்கை மணல் பரப்பு மறைந்து தற்போது வெறும் கருங்கற்கள் தான் காட்சித் தருகின்றன.
கடற்கரை மணலில் கால் பதித்து கடல் அலையோடு விளையாடுவதை அனைவரும் விரும்புவர். இதற்கான வாய்ப்பு புதுச்சேரி கடற்கரையில் இல்லாமல் போனது சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றத்தை அளித்து வந்தது.
புதுச்சேரி கடற்கரையில் கடலரிப்பைத் தடுக்கவும், செயற்கை மணல் பரப்பை உருவாக்க கடந்த 2017 ம் ஆண்டு அரசு முடிவு செய்து, மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் தேசிய பெருங்கடல் தொழில் நுட்ப நிறுவனம், தேசிய கடலோர ஆய்வு மையத்தின் உதவியுடன் தலைமை செயலகம் அருகே ரூ.60 கோடி செலவில் செயற்கை மணற்பரப்பு உருவாக்கப்பட்டது. இதற்காக 125 மீட்டர் நீளம், 100 மீட்டர் அகலத்தில் முக்கோண வடிவில் உட்கட்டமைப்பு கடலில் ஏற்படுத்தப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.
இருப்பினும் மணல் திட்டுபோன்று வடக்கு பகுதியில் மட்டுமே கடற்கரை மணல் பரப்பு உருவாகியுள்ளது. கடற்கரை சாலை முழுவதும் மணற்பரப்பு உருவாக பழைய துறைமுகம் அருகே தெற்கு பக்கமும் செயற்கை மணற்பரப்பிற்கான அடித்தளம் உருவாக்கப்பட உள்ளது.
எனவே, அடுத்தக்கட்டமாக பழைய துறைமுகம் எதிரே ரூ.50 கோடி செலவில் மற்றொரு செயற்கை கடற்கரை உருவாக்க, தேசிய கடலோர ஆய்வு மையத்தின் விரிவான செயல் திட்ட அறிக்கை புதுச்சேரி அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
விரைவில் இந்த செயற்கை மணற்பரப்பு, பழைய துறைமுகம் அருகில் கடலில் வடக்கு நோக்கி செவ்வக வடிவில் 165 மீட்டர் நீளத்தில் 6 யூனிட் ‘ஸ்டீல் கெய்சான்ஸ்’ கொண்டு அமைக்கப்பட உள்ளது.
‘ஸ்டீல் கெய்சான்ஸ்’ என்பது கடலுக்கு அடியில் புதைக்கப்பட உள்ள ராட்சத இரும்பு பைப்பாகும். இது ஒவ்வொரு மூன்று அடி இடைவெளியில் அமைக்கப்படும். கொட்டப்படும் மணல் அலையில் அடித்து செல்லாமல் இருக்கவும், தானாகவே மணல் படியும் வகையில் செயற்கை மணற்பரப்பு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கை மணற்பரப்பிற்கான அடித்தளம் அதே இடத்திலேயே நிலையாகவும் இருக்கும் என்பதால், தலைமை செயலகம் முதல் பழைய துறைமுகம் வரை பரந்த மணற்பரப்பு உருவாகும்.
நிதி எப்படி
தலைமை செயலகம் அருகே 100 சதவீத தேசிய கடலோர ஆய்வு மைய பங்களிப்புடன் செயற்கை மணற்பரப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது புதுச்சேரி அரசு நிதி நெருக்கடியில் உள்ளதால், இதற்கான நிதியை தேசிய கடலோர ஆய்வு மையத்திடம் குறிப்பிட்ட சதவீதத்தில் கேட்க அரசு முடிவு செய்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்