மண்டல, மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் நிறைவு; சபரிமலை வருமானம் ரூ330 கோடி: பக்தர்கள் தரிசனத்துக்கு இன்று கடைசி நாள்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் நேற்றுடன் நிறைவடைந்தது. நாளை காலை 7 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. இன்று இரவு வரை மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்பதால் இன்றும் ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர். இதற்கிடையே இந்த வருடத்துக்கான சபரிமலை வருமானம் ரூ330 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சபரிமலையில் கடந்த 2 வருடங்களுக்கு பின்னர் இந்த மண்டல, மகரவிளக்கு சீசனில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் குவிந்தனர்.

மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி நடை திறந்த அன்று முதல் இன்று வரை தொடர்ந்து பக்தர்கள் வருகை மிக அதிகமாக காணப்பட்டது. இதனால் சில நாட்களில் 10 மணி நேரத்திற்கும் அதிகமாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். வாகனங்கள் நிறுத்தக் கூட இடமில்லாத வகையில் பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். சில நாட்களில் கட்டுக்கடங்காமல் பக்தர்கள் குவிந்ததால் நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக தினசரி ஆன்லைன் தரிசன முன்பதிவு 90 ஆயிரமாக கட்டுப்படுத்தப்பட்டது. ஆனாலும் உடனடி முன்பதிவு கவுண்டர்கள் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்து சபரிமலைக்கு வந்தனர்.

இதனால் சில நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தையும் தாண்டியது. இந்தநிலையில் மண்டல பூஜை கடந்த டிசம்பர் 27ம் தேதியும், மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் கடந்த 14ம் தேதியும் நடைபெற்றது. மகரவிளக்கு பூஜை முடிந்த பின்னரும் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். மண்டல, மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் நேற்றுடன் நிறைவடைந்தது. இன்று இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இரவு நடையை சாத்திய பிறகு பக்தர்கள் சபரிமலையில் தங்க அனுமதி கிடையாது.

நாளை காலை 7 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். அதன் பிறகு பந்தளம் மன்னர் பிரதிநிதிக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி உண்டு. நடை சாத்தப்பட்ட பின்னர் கோயில் சாவியை பந்தளம் மன்னர் பிரதிநிதியிடம் மேல்சாந்தி ஒப்படைப்பார். இதன்பின் அடுத்த ஒரு வருடத்திற்கு சபரிமலையில் பூஜைகள் நடத்த வேண்டும் என்று கூறி சாவியை மேல்சாந்தியிடம் பந்தளம் மன்னர் பிரதிநிதி அளிப்பார். இதன்பின் திருவாபரணத்துடன் பந்தளம் மன்னர் பிரதிநிதி புறப்பட்டு செல்வார். மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை பிப்ரவரி 12ம் தேதி திறக்கப்படும்.

ரூ330 கோடியை தாண்டும்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த வருடம் பக்தர்கள் வருகை அதிகரித்ததை தொடர்ந்து கோயில் வருமானமும் கூடியுள்ளது. நேற்று வரை ரூ320 கோடிக்கும் அதிகமாக மொத்த வருமானம் கிடைத்துள்ளது. இன்னும் நாணயங்கள் உள்பட எண்ண வேண்டியது உள்ளது. இதையும் எண்ணி முடித்தால் மொத்த வருமானம் ரூ330 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சபரிமலை கோயில் வரலாற்றில் இது ஒரு புதிய சாதனையாகும். வழக்கமாக மண்டல, மகரவிளக்கு காலங்களில் மொத்த வருமானம் இதுவரை ரூ250 கோடியை தாண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாணயங்கள் மலை போல் குவிந்து கிடப்பதால் அதை எண்ணி முடிக்க பல நாட்கள் ஆகும் என்று கருதப்படுகிறது.

பம்பை, நிலக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் நிரம்பி வழிகின்றன. அவை இன்னும் திறக்கப்படவில்லை. சன்னிதானத்தில் நாணயங்களை வைப்பதற்கு இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று திறக்கப்பட்ட சில உண்டியல் பணத்தை வாவர் நடை அருகே அமர்ந்து ஊழியர்கள் எண்ணினர். நாணயங்களை ரூபாய் அடிப்படையில் பிரித்து எண்ணுவதா அல்லது எடை போட்டு எண்ணுவதா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க தேவசம் போர்டு சிறப்பு ஆணையருக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.