மல்யுத்த கோதாவில் வீரர்கள் கூட்டமைப்புக்கு எதிராக போர்க்கொடி… களைகளை களையெடுக்குமா அரசு?

மல்யுத்த களமான “கோதா”வில் எதிரிகளை பந்தாட வேண்டிய வீரர்கள், இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிராக போராட்டக்களத்தில் குதித்துள்ள நிலையில், இந்தியாவின் ஒலிம்பிக் கனவை நனவாக்கக் கூடிய மல்யுத்தத்திற்குள் என்னதான் நடக்கிறது என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

இந்தியாவின் பழமையான விளையாட்டுகளில் ஒன்று மல்யுத்தம். ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேசப் போட்டிகளில் இந்திய வீரர்-வீராங்கனைகள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக பாஜகவைச் சேர்ந்த எம்.பி., பிரிஜ் பூஷன் சரண் சிங் செயல்பட்டு வருகிறார். இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து 30 மல்யுத்த பிரபலங்கள் டெல்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டது அரசியல் மற்றும் விளையாட்டுத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போராட்டத்தில் பங்கேற்ற காமன்வெல்த் மற்றும், ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற வீராங்கனை வினேஷ்போகட் கூறுகையில், கூட்டமைப்பு தலைவரால் 12 பெண்கள் வரையில் பாலியல் தொல்லைக்கு உள்ளாகி உள்ளனர். இதனை, அவர்கள் தனிப்பட்ட முறையில் என்னிடம் தெரிவித்தனர். எனவே, இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்றார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற பஜ்ரங்புனியா கூறுகையில், கூட்டமைப்பு தன்னிச்சையாக செயல்பட்டு வருவதால், அதன் தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்களையும் மாற்றும் வரையில் எந்த சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்க மாட்டோம் என்றார்.

தன்மீது மிகப்பெரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், பாலியல் குற்றச்சாட்டு நிருபணமானால் எந்த தண்டனையையும் ஏற்றுக் கொள்வதாக பிரிஜ் பூஷன் தெரிவித்துள்ளார். 

அதிகளவில் பெண்கள் பங்கேற்று வரும் மல்யுத்தத்தில் இதுபோன்ற இழிகுற்றச்சாட்டுகள் எழுவது நாட்டிற்கு அழகல்ல. களையை கிள்ளி எறிய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.