புதுடெல்லி: பாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா 2024 ஜுன் வரை நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேசம், உத்தராகண்ட், கோவா மற்றும் மணிப்பூரில் பாஜகமீண்டும் ஆட்சிக்கு வந்தது, குஜராத்தில் 7-வது முறையாக ஆட்சி அமைத்தது, 73 இடைத்தேர்தல்களில் வெற்றி ஆகியவை இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இத்துடன் பிஹார், மகராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கத்தில் பாஜகவின் முக்கியத்துவம் கூடும் வகையில் அதிக தொகுதிகள் கிடைக்க அவர் காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
நட்டாவின் பதவி நீட்டிப்பை அறிவித்து அமித் ஷா கூறுகையில், “பிரதமர் மோடி, ஜே.பி.நட்டாவின் தலைமையின் கீழ் 2019 தேர்தலை விட அதிக பலத்துடன் 2024 தேர்தலில் பாஜக வெற்றி பெறும். நட்டா தனது பதவிக் காலத்தில் கட்சி முதற்கொண்டு தேர்தல்கள் வரை சிறப்பாக பணியாற்றி உள்ளார். நாடு முழுவதிலும் 1.30 லட்சம் வாக்குச் சாவடிகளில் நமது பலம் கூட்டப்பட்டுள்ளது” என்றார்.
கடந்த 2020-ல் தேசிய தலைவராக தேர்வான நட்டாவின் 3 வருடப் பதவிக்காலம், ஜனவரி20-ல் முடிவடைகிறது. குஜராத்தில் வெற்றி பெற்றாலும் நட்டாவின் சொந்த மாநிலமான இமாச்சலபிரதேசத்தில் பாஜகவின் ஆட்சி பறிபோனது. இச்சூழலில் தேசிய தலைவராக புதியவரை தேர்வு செய்வது கட்சிக்கு இழப்பை ஏற்படுத்தும் என பாஜக கருதுகிறது. ஏனெனில், வரும் 2024 மக்களவைத் தேர்தலின் அரை இறுதிப்போட்டியாக இந்த ஆண்டு நடைபெற உள்ள 9 சட்டப்பேரவை தேர்தல் கருதப்படுகிறது.
இந்த 9 தேர்தல்களிலும், குஜராத் தேர்தலின் வெற்றி சூத்திரம் அமலாக்கப்பட உள்ளது. மேலும் இந்த 9 மாநிலங்களில் பாஜகவின் ஆட்சி இல்லாத தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்டவற்றிலும் வெற்றிக்கு தீவிரம் காட்டப்பட உள்ளது. உ.பி.யின் காஜிபூரின் அனைத்து பேரவை தொகுதிகளிலும் பாஜக 2022 தேர்தலில் தோல்வியுற்றது. எனவே ‘மிஷன் 2024’ எனும் பெயரில் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை காஜிபூரிலிருந்து நட்டா தொடங்குகிறார். பிரதமர் வேட்பாளராக மோடியை 3-வது முறையாக முன்னிறுத்தும் பாஜக, ராமர் கோயில் கட்டி முடித்தது மற்றும் ஜி-20 மாநாட்டின் பலனை பெற முயலும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டத்தில் முக்கிய தலைவர்கள் சுமார் 350 பேர் கலந்து கொண்டனர். தமிழக பாஜகவின் அண்ணாமலை உட்பட அனைத்து மாநில தலைவர்கள் இதில் பங்கேற்றனர். மேலும் பாஜக ஆளும் 12 மாநில முதல்வர்கள், 5 துணை முதல்வர்களுடன் மத்திய அமைச்சர்கள் 35 பேரும் கலந்துகொண்டனர்.
குஜராத்தில் 7-வது முறையாக ஆட்சி அமைத்தது, 73 இடைத்தேர்தலில் வெற்றி ஆகியவை காரணம்.