புதுடெல்லி: கடந்த 1987-ம் ஆண்டு பேட்ச் ஐஆர்டிஎஸ் (இந்திய ரயில்வே டிராபிக் சர்வீஸ்) அதிகாரி பிரமோத் குமார் ஜெனா. கடந்த ஆண்டு நவம்பரில் ஓய்வுபெற்ற இவர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் வசித்து வருகிறார். இவருக்கு எதிராக சிபிஐ சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்தது.
இது தொடர்பாக சிபிஐ செய்தித் தொடர்பாளர் ஆர்.சி.ஜோஷி நேற்று கூறும்போது, “புவனேஸ்வர், கிழக்கு கடற்கரை ரயில்வேயில் முதன்மை தலைமை ஆபரேஷன் மேலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற ஜெனாவுக்கு எதிரான வழக்கில் சிபிஐ சோதனை நடத்தியது. இந்த சோதனையில் ரூ.9.5 கோடி மதிப்புள்ள 17 கிலோ தங்கம், ரூ.1.57 கோடி ரொக்கம், அஞ்சலக சேமிப்பு மற்றும் வங்கி வைப்பு நிதி ரூ.3.33 கோடிக்கான ஆவணங்கள், பரஸ்பர சகாய நிதியில் 47.75 லட்சம் முதலீட்டுக்கான ஆவணங்கள், ஜெனா, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெயரிலான அசையா சொத்துகளுக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன” என்றார்.