முறைகேடாக பாக்., சென்ற தாவூத் இப்ராஹிம் கும்பல் | The gang of Dawood Ibrahim who illegally went to Pakistan

புதுடில்லி, நம் நாட்டில் வசிக்கும் சர்வதேச பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமின் கும்பலைச் சேர்ந்தவர்கள், பாக்., நாட்டு கராச்சி விமான நிலையத்துக்கு அடிக்கடி முறைகேடாக சென்று வந்தது, தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

மும்பையில் பிறந்து வளர்ந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் உள்ளிட்ட பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு, தற்போது தலைமறைவாக உள்ளார்.

இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு, தாவூத்துக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஆண்டு சோதனை நடத்தி, அவரது உறவினர்கள் சிலரை கைது செய்தது.

அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில், தாவூத் இப்ராஹிமின் கும்பலைச் சேர்ந்த சலீம் குரேஷியின் மனைவி சாஜியா கூறியுள்ளதாவது:

தாவூத்தின் நெருங்கிய கூட்டாளியான சோட்டா ஷகீல் மற்றும் அவரது உறவினர்களான எங்களுக்கும், பாக்., கராச்சி விமான நிலையத்தில், எப்போதும் நல்ல வரவேற்பு கிடைக்கும். அந்நாட்டின் முத்திரையின்றி, கராச்சி நகரில் நுழைந்து பல நாட்கள் தங்கியுள்ளோம்.

கடந்த 2013ல் ஒரு முறையும், 2014ல் இரண்டு முறையும், திருமண விழாக்களில் பங்கேற்க, குழந்தைகளுடன் கராச்சி சென்றோம். பின், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாக இந்தியா திரும்பினோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.