விக்கிப்பீடியா போன்ற ஆன்லைன் தளங்கள் முழுவதும் நம்பத்தகுந்தவை அல்ல: உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடி

புதுடெல்லி:  விக்கிப்பீடியா போன்ற ஆன்லைன் தளங்கள் முற்றிலும் நம்பக்கூடியவை இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒன்றிய கலால் கட்டணச் சட்டம் 1985ன் முதல் அட்டவணையின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட ஆல் இன் ஒன் இன்டக்ரேட்டர் டெஸ்க்ட்ப் கம்ப்யூட்டரின் சரியான வகைப்பாடு குறித்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் விக்ரம்நாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, ‘‘ உலகம் முழுவதும் அறிவுக்கான இலவச அணுகலை வழங்கும் ஆன்லைன் தளங்களின் பயன்பாடு ஒப்புக்கொள்ளக்கூடியது தான். ஆனால் சட்ட பிரச்னை தொடர்பான தீர்வுக்கு அத்தகைய தளங்களின் ஆதாரங்களை பயன்படுத்துவது சரியானது அல்ல. விக்கிப்பீடியா போன்ற ஆன்லைன் தளங்களின் ஆதாரங்கள் அதிக எண்ணிக்கையிலான மக்களின் கருத்துக்களின் அடிப்படையில்  அணுககூடியது மற்றும் விக்கிப்பீடியாவை எந்த பயனர் வேண்டுமானாலும் திருத்தும் மாதிரியை அடிப்படையாக கொண்டது.  

இது முழுவதுமாக நம்பத்தகுந்தவை அல்ல மற்றும் தவறான தகவல்கள் ஊக்குவிக்கப்படலாம். இந்த கருத்தை இதற்கு முன்னரும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. நீதிமன்றங்களும், தீர்ப்பு வழங்கும் அதிகாரிகளும் மிகவும் நம்பகமான மற்றும் உண்மையான ஆதாரங்களை நம்புவதற்கு வழக்கறிஞர்களை அறிவுறுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும். தீர்ப்புகூறும் அதிகாரிகள் குறிப்பாக சுங்க ஆணையர் மேல் முறையீட்டின்போது தங்களது தரப்பு முடிவுகளுக்கு ஆதரவாக விக்கிப்பீடியா போன்ற ஆன்லைன் தளங்களின் ஆதாரங்களை விரிவாக குறிப்பிட்டுள்ளனர்” என்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.