விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்த விவகாரம் பாஜ எம்பி மன்னிப்பு கேட்டார்: ஒன்றிய அமைச்சர் விளக்கம்

புதுடெல்லி: விமானத்தின் அவசரகால (எமர்ஜென்சி) கதவை தவறுதலாக திறந்ததற்காக பாஜ எம்பி தேஜஸ்வி சூர்யா  மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இந்த விவகாரத்தில் அனைத்து நடைமுறைகளும் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா விளக்கம் அளித்துள்ளார். கடந்த டிசம்பர் 10ம் தேதி சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்ட இண்டிகோ தனியார் விமானத்தில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜ எம்பி தேஜஸ்வி சூர்யா ஆகியோர் பயணித்தனர். அப்போது விமானத்தில் பயணிகள் ஏறிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென அவசரகால கதவை அவர்கள் திறந்ததாக செய்திகள் வெளியாகின.  

இந்த விவகாரத்தை தொடர்ந்து விமானத்தில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, பின்னர் 2 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் வானில் பறந்து கொண்டிருந்த சமயத்தில், இவ்வாறு பொறுப்பின்றி அவசரகால கதவை திறந்திருந்தால் பெரும் விபரீதம் ஏற்பட்டிருக்கும் என சமூக ஊடகங்களில் பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக மு ஒன்றிய விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பாஜ எம்பி தேஜஸ்வி சூர்யாதான் விமான எமர்ஜென்சி கதவை திறந்ததாக ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா நேற்று கூறி உள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்தவர், ‘‘சம்பவம் நடந்த போது எம்பி தேஜஸ்வி யாதவ் அவராகவே விமான பணியாளர்களிடம் சென்று புகாரளித்துள்ளார். உடனடியாக விமானத்தின் அவசரகால கதவு சரியாக மூடப்பட்டு அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன. அதன் பிறகே விமானம் புறப்பட்டுள்ளது. தவறுதலாக நடந்த சம்பவத்திற்காக தேஜஸ்வி மன்னிப்பும் கேட்டுள்ளார். விமான போக்குவரத்து இயக்குநரகத்திடமும் முறையாக புகார் தரப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அனைத்து நடைமுறைகளும் முறைப்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.