Doctor Vikatan: வெயிட்லாஸ் செய்பவர்களுக்கு தலைமுடி உதிர்வு அதிகமிருக்குமா? நான் கடந்த ஆறு மாதங்களில் 6 கிலோ எடை குறைத்திருக்கிறேன். அதனால் எனக்கு முடி உதிர்வு அதிகமாக இருக்கிறது. இது சாதாரணமானதுதானா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்
எடையைக் குறைக்க நீங்கள் எப்படிப்பட்ட விஷயங்களைப் பின்பற்றுகிறீர்கள் என்பது முக்கியம். முறையான ஊட்டச்சத்து ஆலோசகர் அல்லது மருத்துவரின் வழிகாட்டுதலின் பேரில் செய்கிறீர்களா, ஃபிட்னெஸ் நிபுணரின் ஆலோசனை பெற்றுச் செய்கிறீர்களா என்பது தெரியவில்லை.
பலரும் தாங்கள் கண்டது, கேட்டது என பல விஷயங்களையும் சுயமாக முயற்சி செய்துபார்த்து எடைக்குறைப்பில் இறங்குவார்கள். அது சரியான முறையாக இல்லாமல் போகும்போது இப்படிப்பட்ட பின் விளைவுகள் வரலாம். எடையைக் குறைக்கிற எல்லோருக்கும் முடி கொட்டிப் போகும் என்று சொல்வதற்கில்லை.
கூந்தல் ஆரோக்கியத்துக்கு இரும்புச்சத்து, புரதம் மற்றும் பயோட்டின் ஆகிய மூன்று சத்துகளும் மிக அவசியம். எடைக்குறைப்பு முயற்சியில் இருக்கும் பலரும், மஞ்சள் கரு ஆகாது என முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் மஞ்சள் கருவில்தான் இரும்புச்சத்தும் பயோட்டினும் கிடைக்கும். பால் குடித்தால் கொழுப்பு என அதையும் தவிர்ப்பார்கள். பாலில் உள்ள புரதமும் கூந்தல் வளர்ச்சிக்கு அவசியம். கேரட்டில் அதிக சர்க்கரை உள்ளது என அதையும் தவிர்ப்பார்கள். கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின், மண்டைப் பகுதிக்கு ஊட்டம் அளிக்கக்கூடியது. கூந்தல் வளர்ச்சிக்கு உதவக்கூடியது.
சின்ன வெங்காயம், காலிஃபிளவர் போன்றவற்றில் உள்ள சல்ஃபர் சத்து, கூந்தல் ஆரோக்கியத்துக்கு அவசியமானது என்பதால் அவற்றையும் உங்கள் எடைக்குறைப்புக்கான உணவுப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள். ரெட் மீட்டில் இரும்புச்சத்து மிக மிக அதிகம்.
கீரை, முழு கோதுமை உணவுகளை உண்பதன் மூலம் உடலுக்குக் கிடைப்பதைவிட, இந்த ரெட் மீட் மூலம் கிடைக்கிற இரும்புச்சத்து அதிகம் என்பதால் வாரம் ஒரு முறை 100 கிராம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அளவு தாண்டக்கூடாது. ஈரல் மற்றும் எலும்பு சூப் போன்றவையும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும். சைவ உணவுக்காரர்கள், பாதாம், பேரீச்சம் பழம் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
எடைக்குறைப்பு என்பது அதிரடியாக நடக்கக்கூடாது. அதாவது ஒரே மாதத்தில் நான்கைந்து கிலோ எடை குறைப்பது ஆபத்தானது. அது சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தி, கூந்தல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். எனவே முதல் வேலையாக டயட்டீஷியன் ஆலோசனையோடு உங்களுக்கான சரியான உணவுப்பட்டியலைக் கேட்டுப் பின்பற்றுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.