கடலூரில் புதிய அத்தியாயம் எழுத தயாராகி விட்டது பாஜக. இங்கு முதல்முறை மாநில அளவிலான செயற்குழு கூட்டம் நடத்தப்படுகிறது. இதையொட்டி பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த கூட்டம் தமிழ்நாடு பாஜக வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும் எனத் தொண்டர்கள் பெருமிதம் தெரிவித்தனர். இது ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும் வழக்கமான செயற்குழு என்று கருதிவிட முடியாது. ஏனெனில் தமிழ்நாடு அரசியல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது.
இடைத்தேர்தல் வியூகம்
திமுக – பாஜக இடையிலான சித்தாந்த மோதல், ஆளுநரின் நடவடிக்கைகள், தமிழ்நாடு vs தமிழகம் சர்ச்சை, ரஃபேல் வாட்ச் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த வரிசையில் லேட்டஸ்ட்டாக இணைந்திருப்பது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல். வரும் பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எனவே இடைத்தேர்தல் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்ட நகர்வுகள் குறித்து தமிழ்நாடு பாஜக முடிவு எடுக்க வேண்டியுள்ளது.
விரிவான ஏற்பாடுகள்
இதற்கு கடலூரில் இன்று (ஜனவரி 20) நடக்கும் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நல்லதொரு வாய்ப்பாக இருக்கும் எனத் தெரிகிறது. இன்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை மாநில செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கு பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி தலைமை வகிக்கிறார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் மாநில, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
அண்ணாமலை சிறப்புரை
இந்த கூட்டத்தில் காலை 10 மணி, மாலை 4 மணி என இரண்டு முறை அண்ணாமலை சிறப்புரையாற்றுகிறார். கட்சியினருக்கு சில வழிகாட்டுதல்களை பிறப்பிக்க உள்ளார். இதுதவிர பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆளும் திமுக அரசுக்கு எதிரான விஷயங்கள் இருக்கும் என்பது மறுப்பதற்கில்லை. மேலும் ஈரோடு கிழக்கில் பாஜக போட்டியிடுகிறதா? இல்லையா? கூட்டணியின் முடிவிற்கு கட்டுப்படுவார்களா?
முக்கிய முடிவு
இல்லை தனித்து களமிறங்க கூடுமா? யார் வேட்பாளர்? போன்ற கேள்விகளுக்கு விடை தெரிய வாய்ப்புள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதில் இருந்தே போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பாக சில பெயர்கள் பாஜக வட்டாரத்தில் இருந்து கிசுகிசுக்கப் படுகின்றன. குறிப்பாக பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏபி முருகானந்தம் போட்டியிட வாய்ப்புள்ளதாக பேச்சு அடிபட்டது.
மக்களவை தேர்தல்
இதுதவிர 2024 மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கிறது. இதற்கான வேலைகளை தொடங்குவது பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட வேண்டியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் தற்போது 4 பாஜக எம்.எல்.ஏக்கள் இருக்கின்றன. இதை வைத்து மக்களவை தேர்தலில் வாக்கு வங்கி அரசியலை எப்படி கையாள்வது, பூத் கமிட்டி வேலைகளை முடுக்கி விடுவது, பாஜகவிற்கு செல்வாக்கு மிகுந்த தொகுதிகளை கட்டம் கட்டுவது போன்ற விஷயங்களுக்கு கடலூர் கூட்டத்தில் அடித்தளம் போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.