சேவல் சண்டையில் ஈடுபடுத்தப்பட்ட 4 சேவல்களை காவல்துறையினர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து பராமரித்து வருகின்றனர்.
புதுச்சேரி தேங்காய்திட்டில் பொங்கலன்று சேவல் சண்டை நடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து முதலியார்பேட்டை போலீசார் சென்று பார்த்த போது ஒரு கூட்டமே சேவல் சண்டை நடத்தியது.
திலகர் நகரை சேர்ந்த சின்னதம்பி, பிரதாப் ஆகியோர் சேவல் பந்தயம் நடத்தியது தெரிய வந்தது. காவல்துறையினர் அங்கு வருவதை கண்டதும் அனைவரும் தப்பிச் சென்றனர்.
பந்தயம் நடத்திய சின்னதம்பி, பிரதாப் ஆகியோரை மட்டும் காவல்துறையினர் கைது செய்து பிணையில் விடுவித்தனர். ஆனால் சேவல்கள் விடுவிக்கப்படாமல் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் கூண்டில் வைக்கப்பட்டுள்ளன.
ஜாவா, கலிவா, கதிர், யாகத் ஆகிய பெயர்களை கொண்ட சேவல்கள் காவல் நிலையத்தில் உள்ளன. சேவல்களுக்கு உணவு கொடுத்து காவல்துறையினர் பராமரித்து வருகின்றனர்.
சேவல்களுக்கு ஆபத்து வந்தால் வழக்கு காவல்துறை பக்கம் திரும்பும் என்பதால் சேவல்களை பாதுகாக்கும் பணியில் முதலியார்பேட்டை போலீசார் பொறுப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
newstm.in