சென்னை: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக காவல் துறை உயரதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, உள்துறைச் செயலர் க.பணீந்திரரெட்டி, டிஜிபி செ.சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அதேபோல, அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள் ஆகியோர் காணொலி வாயிலாகப் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முறையாகப் பராமரிக்கப்பட்டு வருவது, தொழில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கிறது. தமிழகத்தில் தொடர்ந்து புதிய தொழில்கள் உருவாகும் வகையில், அமைதி தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும். எனவே, தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதிகளில், அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தனி கவனம் செலுத்துவது அவசியம்.
மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து முன்கூட்டியே அறிந்து, அவற்றைத் தடுக்க தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல, கொலைக் குற்றங்கள், ஆதாயக் கொலைகள், கூட்டுக் கொள்ளைகள், கொள்ளைச் சம்பவங்கள் போன்ற குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், குற்றச் சம்பவங்கள் நடைபெறும்போது, காவல் ஆணையர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, குற்றவாளிகளை கைது செய்து, கொள்ளை போன நகைகளை மீட்டு, இழந்தவர்களுக்குத் திரும்ப வழங்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால், அது நீதிக்கு நாம் செய்யும் பிழையாகிவிடும்.
காவல் துறையின் சிறப்பான, பாரபட்சமற்ற, திறமையான, துரிதமான பணியே, மக்களிடம் காவல் துறைக்கும், அரசுக்கும் நல்ல பெயரை பெற்றுத்தரும். சட்டம்-ஒழுங்குக்கு சவால் விடும் எந்த சக்தியையும், எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது. எவ்வித தயக்கமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புகார் அளிக்க வரும் ஏழை மக்களை, குறிப்பாக பெண்களை மனிதநேயத்துடன் அணுகி, அவர்களது புகாரைப் பதிவு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழக மக்கள் சட்டம்-ஒழுங்குக்கு கட்டுப்பட்டு நடப்பவர்கள். மத நல்லிணக்கத்துடன், அனைவருடனும் இணக்கமாக வாழும் தன்மை கொண்டவர்கள். இந்த சமூகக் கட்டமைப்பை பத்திரமாகப் பாதுகாக்கும் பொறுப்பு காவல் துறைக்கு உள்ளது. காவல் நிலையத்துக்குச் சென்றால் நிச்சயம் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை, ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உருவாக்க வேண்டும். இதை காவல் துறைத் தலைவர் உறுதி செய்ய வேண்டும். இதையே நானும், மக்களும் எதிர்பார்கிறோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.