சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் மீது மார்பில் மிதித்து, இனவெறி தாக்குதல்

சிங்கப்பூர்,

உலகம் முழுவதும் 2019-ம் ஆண்டு இறுதியில் இருந்து கொரோனா பெருந்தொற்று பல்வேறு அலைகளாக பரவ தொடங்கியது. 3 ஆண்டுகளாக உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தன. இதில், சிங்கப்பூரும் அடங்கும். இந்நிலையில், அந்நாட்டில் வசித்து வரும் இந்திய வம்சாவளி பெண் ஹின்டோசா நீட்டா விஷ்ணுபாய் (வயது 57) பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கோர்ட்டில் தெரிவித்து உள்ளார்.

கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோது, 2021-ம் ஆண்டு மே மாதம் 7-ந்தேதி வாங் ஜிங் போங் என்பவர் முக கவசம் அணியவில்லை என கூறி என் மீது தாக்குதல் நடத்தினார். எனது மார்பில் மிதித்து, இனவெறியுடன் தாக்கினார்.

அந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து என்னால் மீண்டு வெளிவர முடியவில்லை என அவர் தெரிவித்து உள்ளார்.

அந்த நிகழ்வை நினைவுகூர்ந்த அவர், அந்த நேரத்தில் இருந்த விதிகளின்படி, முக கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

சம்பவம் நடந்த அந்த நாளில், வேலைக்கு சென்று கொண்டிருந்தேன். நேரம் இல்லை என்பதற்காக பணிக்கு செல்லும் முன் உடற்பயிற்சி எதுவும் மேற்கொள்ள முடியவில்லை.

அதனால், நடைபயிற்சி மேற்கொண்டபடி வேலைக்கு போய் கொண்டிருந்தபோது, நன்றாக சுவாசிக்கும் வகையில் அணிந்திருந்த முக கவசம் ஒன்றை சற்றே தாடை பகுதி வரை கீழே இறக்கி விட்டு இருந்தேன்.

அதன்பின் நார்த்வாலே கன்டோமினியம் பகுதியருகே பேருந்து நிறுத்தத்திற்கு சென்றபோது, பின்னால் இருந்து ஒருவர் சத்தம் போட்டு என்னை கூப்பிட்டார்.

திரும்பி பார்த்தபோது, வாங் மற்றும் பெயர் தெரியாத ஒரு பெண் என்னை நோக்கி வந்தனர். என்னை முக கவசம் போடும்படி சைகையில் காண்பித்தனர். ஆனால், நான் உடற்பயிற்சியில் இருக்கிறேன் என கூறினேன்.

அப்போது, வாங் என்னை நோக்கி வந்து, இனரீதியாக திட்டினார். அதற்கு நான், சண்டை போட எனக்கு விருப்பமில்லை சார். அதனால், கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் என கூறினேன்.

ஆனால், வாங் ஓடி வந்து எனது மார்பில் ஓங்கி மிதித்து விட்டு, ஒன்றும் நடக்காதது போல் அந்த பெண்ணுடன் ஜாகிங் செய்தபடி சென்றார். அவர் மிதித்ததில் பின்னால் விழுந்ததில், இடது கை மற்றும் பாதத்தில் எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது என்று கூறியுள்ளார். எனினும், ஹின்டோச்சா கூறிய குற்றச்சாட்டுகளை கோர்ட்டில் வாங் மறுத்து உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.