செரெங்கெட்டி தேசியப் பூங்கா: முடிவில்லாச் சமவெளியில் ஒரு முடிவற்ற ஊர்வலம் – 4

அழகின் உறைவிடமான கிரேட்டரை பார்த்துவிட்டு அங்கிருந்த விலங்குகளைப் படம் எடுத்துக்கொண்டு, செரங்கெட்டி தேசிய பூங்காவை நோக்கி நமது பயணம் ஆரம்பமாகிறது.

செரெங்கெட்டி தேசியப் பூங்கா

“செரங்கெட்டி” என்பது மசாய் மொழிப்பெயர், இதற்கு தமிழில் “முடிவில்லாச் சமவெளி” என்று பொருள்.  எவ்வளவு அழகான பொருள் பொதிந்த பெயரை சூட்டி இருக்கிறார்கள் அந்த மசாய் பழங்குடியினர் என்பதை அறிந்த போது வியப்பாக இருந்தது, அவர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் நானும் அழகிய தமிழில் ”முடிவில்லா சமவெளி” என மொழி மாற்றம் செய்துள்ளேன்.

பொதுவா காடுனா சூரிய வெளிச்சம் ஊடுருவ முடியாதபடி மரங்கள் அடர்ந்து காணப்படும். அதைத்தான் நாம காடுன்னு சொல்வோம். ஆனா இங்கு மரங்களே இல்லாமல் முடிவில்லாச் சமவெளியாக, எங்க பார்த்தாலும் சமவெளிகள் இருக்கு. அதுல புற்கள் முளைச்சிருக்கு! கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் புல்! புல்! புல்! மட்டும் தான்.

செரெங்கெட்டி தேசியப் பூங்கா

செரங்கெட்டி தேசிய பூங்கா வெளி வட்டப்பாதையில் (Buffer Zone)  நமது பயணம் சென்று கொண்டிருக்கும்போது பூர்வகுடிகளான மசாய் ( Maasai) மக்கள் வசிக்கும் கிராமங்கள் தென்படுகின்றன. இந்த மக்கள் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டு சிறு, சிறு குழுக்களாகக் கிராமங்களை அமைத்துக் கொண்டுள்ளனர்.

இவர்கள் ஆடு, மாடு மேய்க்கும்போது காட்டு விலங்குகளான மான்கள், ஒட்டகச்சிவிங்கி, காட்டு மாடுகள், இன்னும் பிற விலங்குகள் ஊடாகவே ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டுள்ளனர். இவர்களால் விலங்குகளுக்கும், விலங்குகளால் இவர்களுக்கும் தொல்லை இருப்பதாக நான் பார்க்கவில்லை.

இந்தப் பூங்கா ஏறக்குறைய 30,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உடையது. நமது தமிழ்நாட்டின், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் ஏறக்குறைய 900 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உடையது. சற்று ஒப்பிடுங்கள், 30,000 சதுர கிலோமீட்டர் செரங்கெட்டி, 900 சதுர கிலோமீட்டர் களக்காடு – முண்டந்துறை, செரங்கெட்டி எவ்வளவு பெரிய தேசிய பூங்கா என கற்பனை செய்து பாருங்கள்! இந்தப் பூங்கா தான்சானியாவில் ஆரம்பித்து கென்யா வரை நீண்டுள்ளது. கென்யாவில் இதன் பெயர் மசாய் மாரா.

செரங்கெட்டி தேசியப்பூங்கா மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

1. சரங் கட்டி பிளைன் (சமவெளி பகுதி)

2. வெஸ்டன் காரிடர் (மேற்குப் பகுதி)

3. நார்தன் செரங்கெட்டி (வடக்குப்பகுதி)

செரெங்கெட்டி தேசியப் பூங்கா

செரங்கெட்டி உயரம் கடல் மட்டத்திலிருந்து 3,000 அடி முதல் 6,000 அடி வரை, நம்ம கொடைக்கானல் உயரம் கடல் மட்டத்திலிருந்து 7,000 அடி, ஏறக்குறைய கொடைக்கானல் உயரம் இருக்கும் அங்கே, 30,000 சதுர கிலோமீட்டர் சம வெளி  என்பது எவ்வளவு பெரிய ஆச்சரியம்! எப்படி உருவானது இந்தச் சமவெளிகள்? ஏன் மரங்கள் இல்லை? என்ற கேள்வி மனதில் எழும்!

சென்ற அத்தியாயத்தில் ஏற்கனவே நான், கிரேட்டர் பற்றி சொல்லியிருந்தேன். அந்த இடத்தில் எரிமலை வெடித்து, எரிமலைக் குழம்புகள் (volcano) இந்தப் பகுதி முழுவதும் பரவி இங்குள்ள மரங்களை அழித்து விட்டதாம். இது பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு. அதன்பின் இது புல் முளைக்கும் ஒரு சமவெளிப் பிரதேசமாகவே மாறிவிட்டது. எங்காவது தூரத்தில் ஓரிரு மரங்கள் மட்டுமே தென்படும்.

செரெங்கெட்டி

இங்கேதான் 3,000 சிங்கங்கள், 1,000 சிறுத்தைகள், 500 யானைகள், காண்டாமிருகங்கள், சிவிங்கிப்புலிகள், எருமைகள், கழுதைப் புலிகள், காட்டு நாய்கள், குரங்குகள், மற்றும் வரிக்குதிரைகள், ஒட்டகச் சிவிங்கிகள், மான்கள், பல லட்சம் காட்டு மாடுகள் வாழ்கின்றன. இது தவிர பறவைகள் மற்றும் எண்ணிலடங்கா உயிரினங்கள் அனைத்துக்கும் ஒரு சொர்க்கபுரி இந்தச் செரங்கெட்டி தேசிய பூங்கா.

இந்தத் தேசியப் பூங்காவில் நடக்கும் ஓர் அற்புத நிகழ்வு தான், உலகில் உள்ள மக்களை கவனம் ஈர்த்து இங்கே வர வைக்கிறது, அதுதான் இங்குள்ள காட்டு மாடுகளின் (WILDEBEEST ) நீண்ட பேரணி

பொதுவா உயிரினங்கள் இடப்பெயர்வு என்பது, வாழும் சூழ்நிலை, இனப்பெருக்கம் மற்றும் உணவுத்தேவைகள் இவற்றுக்காகத்தான் நடக்கிறது.

சில பறவைகள், குளிர் நாடுகளில் நீர்நிலைகள், குளிரால் உறைந்துவிடும் போது உணவு தேடி அவை வலசை [அதாவது MIGRATION] செல்கின்றன, சில பறவைகள் கண்டம் விட்டு கண்டம் கூட வலசை செல்லும்.

காட்டு மாடுகளின் (WILDEBEEST ) நீண்ட பேரணி

பறவைகள் பறக்கும் தன்மையினால் வலசை செல்லும், ஆனால் பிற உயிரினங்கள் வலசை செல்லுமா? என்ற கேள்விக்கான பதில்தான் ஆப்பிரிக்காவின் THE GREAT WILDEBEEST MIGRATION காட்டு மாடுகளின் வலசைப் பயணம் எங்கிருந்து தொடங்குகிறது, எங்கு முடிகிறது அதனால் உலகிற்கு கிடைக்கும் நன்மை என்ன? என்பது பற்றி அடுத்தடுத்த பகுதிகளில் தெரிந்து கொள்ள, ஆப்பிரிக்காவின் செரங்கட்டி தேசிய பூங்காவினுள் தொடர்ந்து பயணிப்போம்..

வெளிவட்ட பகுதி [BUFFER ZONE] என்பது காடுகளைச் சுற்றியுள்ள வெளிப்பகுதி, இங்குச் சில கட்டுப்பாடுகளுடன் மனிதர்கள் வசிக்கிறார்கள். பெரும்பாலும் விலங்குகள் மனிதனிடமிருந்து ஒதுங்கியே வாழும், ஒருசில நேரங்களைத் தவிர இந்த வெளிவட்ட பாதைக்கு அவ்வளவாக விலங்குகள் வருவதில்லை, இந்த வெளிவட்டப் பாதை இந்தியாவில் அதிகமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, சுற்றுலா மயமாதல் மற்றும் நகரமயமாகுதல் போன்ற காரணங்களால் மனித விலங்கு மோதல் நடப்பதற்கு காரணமாக அமைகிறது என நான் எண்ணுகிறேன்.

செரெங்கெட்டி

அடர்ந்த காடுகள் [CORE ZONE] என்பது விலங்குகள் அடர்த்தியாக வாழும் பகுதி பெரும்பாலும் எல்லா நாடுகளிலும் இங்கு மக்கள் வசிக்க தடை செய்யப்பட்டுள்ளது. தான்சானியாவில் காடுகள் பற்றிய ஆராய்ச்சி நிலையம் ஒன்று இருப்பதை அடர் காட்டில் பார்த்திருக்கிறேன், அது தவிர சுற்றுலா பயணிகள் தங்கும் தற்காலிக கூடாரங்கள் மட்டுமே உள்ளன, மனிதன் வசிப்பதற்கு அங்கு அனுமதி இல்லை.

-கானகம் காண்போம்

– டாக்டர் மணிவண்ணன்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.