திரிபுராவில் பாஜக வென்ற கதை… கம்யூனிஸ்ட்களின் 25 ஆண்டுகால ஆட்சி வீழ்ந்தது இப்படித் தான்!

இந்தியாவில் அதிக முறை மாநில முதல்வராக இருந்தவர்களின் பட்டியலை தூசு தட்டினால், அதில் வடகிழக்கு மாநிலங்கள் வரிசை கட்டி ஓடிவரும். அந்த பட்டியலில் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த மாணிக் சர்காருக்கு ஒரு இடமுண்டு. 19 ஆண்டுகள் 363 நாட்கள் தொடர்ந்து முதல்வராக பதவி வகித்துள்ளார். மிக மிக எளிய வாழ்க்கை முறையை கொண்டவர். தனக்கு வரும் சம்பளத்தை கூட கட்சி நிதிக்காகவும் அர்ப்பணித்தவர்.

கம்யூனிஸ்ட்கள் ஆட்சி

தனக்கென்று சொந்தமாக எதையும் வைத்துக் கொள்ளாத ஒருவர். இவருக்கு முன்பு தசரத் தெப்பர்மா 4 ஆண்டுகள் 335 நாட்கள் முதல்வராக இருந்தார். இதன்மூலம் திரிபுராவில் தொடர்ந்து 25 ஆண்டுகள் கம்யூனிஸ்ட்கள் ஆட்சி கட்டிலில் இருந்துள்ளனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. மொத்தம் 35 ஆண்டுகள் திரிபுராவில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள்.

பாஜக வியூகம்

இவர்களை 2018ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் வீழ்த்தி பாஜக முதல்முறை ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. இதன்மூலம் வடகிழக்கில் புதிய அத்தியாயத்தை எழுத ஆரம்பித்தது. இது எப்படி சாத்தியமானது? கம்யூனிஸ்ட்கள் எப்படி வீழ்ந்தார்கள்? எனப் பலருக்கும் கேள்வி எழலாம். பாஜகவை பொறுத்தவரை அவர்களது தந்திரத்தில் முக்கியமானது ஆளுங்கட்சிக்கு எதிராக இருக்கும் சிறிய கட்சிகளை ஒன்றிணைப்பது. இதைத் தான் திரிபுராவில் கச்சிதமாக கையாண்டது.

பூர்வகுடி மக்கள்

2014ஆம் ஆண்டே அணி திரட்டும் வேலைகளை தொடங்கியது. திரிபுராவில் மட்டுமல்ல ஒட்டுமொத்த வடகிழக்கிலும் ஆளும் கட்சிகளுக்கு எதிரான மனநிலையில் இருப்பவர்களை தன்வசம் கொண்டு வந்தது. அதில் மலைவாழ் பூர்வகுடி மக்கள் முக்கியமானவர்கள்.

இவர்களுக்கு இருந்த சிறிய அதிருப்தியையும் பெரிதாக்கி அரசியல் சாயம் பூசினர். ஏற்கனவே வடகிழக்கில் செல்வாக்கு பெற்று விளங்கிய கம்யூனிஸ்ட்கள்,
காங்கிரஸ்
ஆகிய கட்சிகளுக்கு எதிராக 10 கட்சிகள் கொண்ட கூட்டணியை உருவாக்கியது.

தனி நாடு கோரிக்கை

அதற்கு ”வடகிழக்கு பிராந்திய அரசியல் முன்னணி” என்று பெயர் வைத்தது. குறிப்பாக திரிபுராவில் அம்மாநில பூர்வகுடி மக்கள் முன்னணி உடன் கைகோர்த்தனர். இவர்கள் கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருபவர்கள். பல ஆண்டுகளாக பிரிவினைவாதம் பேசுபவர்கள். தனி நாடு வேண்டும் என்பது தான் இவர்களின் குறிக்கோள். இந்த விஷயத்தில் முரண்பட்டு நிற்கும் பாஜக, ஆட்சியை பிடிக்க எதை பற்றியும் கவலைப்படாமல் கூட்டணி அமைத்தது.

சமூக வலைதளங்கள்

இதையடுத்து பிரச்சார வியூகம் அமைத்தது. அனைவரது கைகளிலும் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்து விட்ட சூழலில் அதன் வழியாக தங்களது முன்னிலைப்படுத்தினர். வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் தீவிரமாக பிரச்சாரம் செய்தனர். தங்கள் எதிர்கால தேர்தல் வாக்குறுதிகளை, திரிபுரா எந்தெந்த விஷயங்களில் பின்னடைவாக இருக்கிறது என்பதை சுட்டி காட்டி வாக்கு சேகரித்தனர்.

உள்ளூர் பிரச்சினைகள்

அதுமட்டுமின்றி கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக செயல்பட்ட மக்கள் இயக்கங்களை வசப்படுத்த ஆரம்பித்தனர். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள உள்ளூர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஸ்கெட்ச் போட்டது. மக்களை நேரடியாக சந்தித்து தங்களின் புதிய திட்டங்கள், மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் பற்றி எடுத்துரைத்தனர். 100 சதவீத வளர்ச்சி என்ற விஷயத்தை மீண்டும் மீண்டும் மக்கள் மனங்களில் பதிய வைத்தனர். தங்களது வியூகத்தை பூத் கமிட்டிகள் வரை கொண்டு சென்றனர்.

அபார வெற்றி

இந்த விஷயங்களை எல்லாம் சுமார் நான்கு ஆண்டுகளாக பாஜக செயல்படுத்தி வந்தது. இதற்கான பலன் யாருமே எதிர்பாராதது. 2013 சட்டமன்ற தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில் வெற்றி பெறவில்லை. வெறும் 0.05 சதவீத வாக்குகள் மட்டுமே. அதுவே 2018ல் பாஜக மட்டும் 36 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. 43.59 சதவீத வாக்குகள். 5 ஆண்டுகள் எந்தவித சிக்கலும் இன்றி ஆட்சியை தொடர்ந்த நிலையில் வரும் பிப்ரவரி 16ஆம் தேதி சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.