மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவுகள்… பூதாகரமாகும் போராட்டம் – என்ன நடக்கிறது?

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக பிரிஜ் பூஷன் சரண் சிங் பதவி வகிக்கின்றார். இவருக்கு எதிராக, காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெற்றிபெற்ற முதல் வீராங்கனை வினேஷ் போகத், ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற சாக்சி மாலிக் மற்றும் பஜ்ரங் பூனியா உள்ளிட்ட முக்கிய பெண் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

பிரிஜ் பூஷன் சரண் சிங்

பிரிஜ் பூஷன் சரண் சிங் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, பல்வேறு மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாகப் போராட்டம் நடத்திவருகிறார்கள். மல்யுத்த கூட்டமைப்பு தலைவரான பிரிஜ் பூஷன், பா.ஜ.க-வின் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த குற்றச்சாட்டு இந்திய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஹரியானா முதல்வர் உட்பட பல்வேறு தரப்பினரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பாலியல் புகார்:

பத்திரிகையாளர்களிடம் பேசிய வினேஷ் போகத், “லக்னோவில் செயல்பட்டுவரும் தேசிய மல்யுத்த பயிற்சி முகாமில் பணியாற்றும் பல பயிற்சியாளர்கள் வீராங்கனைகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துகின்றனர். கூட்டமைப்பின் தலைவரால் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதாக 10-க்கும் மேற்பட்ட பெண்கள் என்னிடம் புகார் தெரிவித்துள்ளனர். அவர்கள் பெயர்களை, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்தால் அவர்களிடம் தெரிவிப்பேன். நான் பாலியல் சீண்டல்களைச் சந்தித்தது இல்லை.

வினேஷ் போகத்

ஆனால், இங்கு நடக்கும் விஷயங்களைப் பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன் என்று சொன்னதுமே, எனக்குத் தலைவருக்கு நெருக்கமான அதிகாரிகளின் மூலம் கொலை மிரட்டல் வந்தன. இந்த குற்றத்தில் பயிற்சியாளர்கள், நடுவர்கள் இருக்கிறார்கள். பிரிஜ் பூஷனை பதவியிலிருந்து நீக்கும்வரை எங்கள் போராட்டம் தொடரும். அதுவரை எந்த தடகள விளையாட்டு வீரர்களும் எவ்வித நிகழ்வுகளிலும் பங்கேற்க மாட்டார்கள்” என்று பேசியிருந்தார்.

சர்வாதிகார போக்கு:

சாக்‌ஷி மாலிக் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஒட்டுமொத்த கூட்டமைப்பும் அகற்றப்பட வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் புதிய மல்யுத்த வீரர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். புதிய கூட்டமைப்பு அமைய வேண்டும். கீழ் நிலையிலிருந்து அழுக்கு உள்ளது. இது தொடர்பாகப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் பேசி விவரங்களைக் கூறுவோம். சில விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

மல்யுத்த வீரர்கள் போராட்டம்

அதேபோல, பஜ்ரங் புனியா பேசியபோது, “எதிர்காலத்தில் வரும் புதிய மல்யுத்த வீரர்கள் பாதுகாப்பாக இருக்க தற்போதுள்ள ஒட்டுமொத்த கூட்டமைப்பும் அகற்ற வேண்டும். தற்போது, மல்யுத்த கூட்டமைப்பின் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு விளையாட்டு குறித்து எதுவும் தெரியவில்லை. புதிதாக ஒரு கூட்டமைப்பு அமைக்கப்படவேண்டும். இந்த விவகாரங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.

72 மணி நேரத்தில் பதில்:

இந்த குற்றச்சாட்டு குறித்துப் பேசிய கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், “போராட்டம் நடத்தும் வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. கடந்த பத்து வருடங்களில் கூட்டமைப்புடன் எந்த பிரச்னையும் இல்லையா? புதிய விதிமுறைகள் கொண்டுவரும்போது இப்படியான பிரச்னைகள் வரும். பாலியல் துன்புறுத்தல் எதுவும் நடக்கவில்லை. அப்படி நடந்திருந்தால் நானே தூக்கிட்டுக் கொள்வேன். எந்த விசாரணைக்கும் நான் தயார்” என்று சொல்லியிருந்தார்.

பிரிஜ் பூஷன் சரண் சிங்

போராட்டம் வலுப்பெறும் நிலையில், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் மல்யுத்த கூட்டமைப்புக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், இந்த விவகாரம் விளையாட்டு வீரர்களின் நலன் சார்ந்தது என்ற காரணத்தினால் அமைச்சகம் இந்த பிரச்னையைத் தீவிரமாகப் பார்க்கின்றது. இதுகுறித்து அடுத்த 72 மணிநேரத்திற்குப் பதிலளிக்க வேண்டும். தவறினால், தேசிய விளையாட்டுத்துறை விதி, 2011ன் படி இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நிலை ஏற்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

அதே சுழலில், கூட்டமைப்பு தலைவருக்கு எதிரான பாலியல் புகாரை விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. வீராங்கனைகள் முன்வைத்த குற்றச்சாட்டு பூதாகரமாகிவரும் நிலையில், கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் விரைவில் ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயத்தில் லக்னோவில் உள்ள தேசிய சிறப்பு மையத்தில் தொடங்கவிருந்த பயிற்சி முகம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.