மும்பை: “ஏக்நாத் ஷிண்டே – பட்னாவிஸ் ஜோடி உங்கள் கனவுகளை நிறைவேற்றும்” – பிரதமர் மோடி

மும்பையில் ரூ.38 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தார். இந்நிகழ்ச்சியை மும்பை மாநகராட்சி தேர்தலுக்கான பிரசார தொடக்க நிகழ்ச்சியாகவும் நடத்த பாஜக திட்டமிட்டு இருந்தது. மும்பை பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்தேரி குண்ட்வாலி மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், தகிசர்-டி.என்.நகர் மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் அந்தேரி கிழக்கு-தகிசர் கிழக்கு இடையிலான இரு மெட்ரோ ரயில் திட்டங்களை தொடங்கி வைத்து அதில் சிறிது தூரம் பயணம் செய்தார் பிரதமர் மோடி.

இது தவிர பாந்த்ரா – குர்லா காம்ப்ளக்ஸில் நடந்த விழாவில் தாராவி உட்பட 7 இடங்களில் 17,200 கோடியில் அமைக்கப்பட இருக்கும் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். அதோடு மும்பையில் 400 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலைகளை கான்கிரீட் மயமாக்கும் திட்டத்தையும் மோடி தொடங்கி வைத்தார். மெட்ரோ ரயிலுக்கான மொபைல் ஆப் மற்றும் மெட்ரோ ரயில் பயன்பாட்டிற்கான ஒரே கார்டையும் தொடங்கி வைத்தார். இது தவிர சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலைய மேம்பாட்டுப்பணிகளையும் தொடங்கி வைத்தார். மொத்தம் 38 கோடி மதிப்பிலான திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “முன்பெல்லாம் நமது வறுமையை பற்றி உலக நாடுகள் பேசின. மற்ற நாடுகளிடம் நாம் உதவி கேட்டோம். ஆனால் இப்போது நிலைமை மாறியிருக்கிறது.

இரட்டை எஞ்சின் அரசு மக்களின் நலனுக்காக விடாமுயற்சியுடன் பணியாற்றுவது அவசியம். முந்தைய அரசில் ஊழல் கறை படிந்திருந்தது. சுதந்திரத்திற்கு பிறகு நாடு மிகப்பெரிய கனவு கண்டுள்ளது. அந்த கனவு நனவாகியும் இருக்கிறது. முதல் முறையாக மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது. வளர்ச்சியடைந்த நாடுகள் கூட பொருளாதாரத்தை சமாளிக்க போராடுகின்றன. அதே சமயம் இந்தியா 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் கொடுத்துக்கொண்டிருக்கிறது. இரட்டை எஞ்சின் ஆட்சியில் ரயில் நிலையங்கள் கூட விமான நிலையங்கள் போல் காட்சியளிக்கிறது. வளர்ச்சித் திட்டப்பணியில் ஊழல் நுழைய பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுகள் அனுமதிக்காது. ஆனால் வளர்ச்சித்திட்டத்தில் ஊழல் நுழைந்ததை மும்பை இதற்கு முன்பு கண்டிருக்கிறது.

மோடிக்கு நினைவு பரிசு

ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் ஜோடி மும்பை மக்களின் கனவுகளை நிறைவேற்றும். மும்பைக்கு வளர்ச்சிக்கு நிதி ஒரு பிரச்னை கிடையாது. தாராவி மேம்பாட்டுத்திட்டத்தை செயல்படுத்த இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. ஏழைகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அரசு உறுதி பூண்டுள்ளது” என்று தெரிவித்தார்.

முன்னதாக தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் பேசினர். அவர்கள் இதில் முந்தைய சிவசேனா கூட்டணி அரசை கடுமையாக விமர்சித்தனர். மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அரசு பதவிக்கு வந்த பிறகு முதல் முறையாக நரேந்திர மோடி மும்பை வந்திருந்தார். மோடியின் வருகையையொட்டி நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.